ஜார்க்கண்ட் அமைச்சரின் செயலர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'
ஜார்க்கண்ட் அமைச்சரின் செயலர் வீட்டில் அமலாக்க துறை 'ரெய்டு'
ADDED : அக் 15, 2024 01:44 AM

ராஞ்சி, ஜார்க்கண்டில், ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக, மாநில அமைச்சர் மதிலேஷ் குமார் தாக்குரின் செயலர் மணீஷ் ரஞ்சன் வீடு உட்பட, 20 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது; 81 தொகுதிகள் உடைய இம்மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஜார்க்கண்டில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதில், நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருமான மதிலேஷ் குமார் தாக்குரின் தனி செயலரும், நிலம், சாலை மற்றும் கட்டடத் துறை செயலருமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி மணீஷ் ரஞ்சன் வீட்டில் அமலாக் கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல், அவரது சகோதரர் வீடு, ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் நேற்று சோதனை நடத்தினர்.
ராஞ்சி, மேற்கு சிங்பூம் மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமைச்சரின் தனி செயலர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிபணிய மாட்டோம்!
மத்திய பா.ஜ., அரசின் அழுத்தத்தால், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேர்தல் நடக்கவுள்ளதால், எங்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இது போன்ற சதி வேலைகளில் பா.ஜ., ஈடுபடுகிறது. என்ன செய்தாலும் பா.ஜ.,வுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.
மதிலேஷ் குமார் தாக்குர்
ஜார்க்கண்ட் அமைச்சர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா