காஷ்மீரை சீரழித்த 3 குடும்ப கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு
காஷ்மீரை சீரழித்த 3 குடும்ப கட்சிகள்: பிரதமர் மோடி தாக்கு
UPDATED : செப் 14, 2024 03:15 PM
ADDED : செப் 14, 2024 08:18 AM

தோடா: காஷ்மீரை, குடும்ப அரசியல் நடத்தும் 3 அரசியல் குடும்பங்கள், சேர்ந்து வாரிசு அரசியல் நடத்தி சீரழித்து விட்டது என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று(செப்.,14) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: இந்த தேர்தலானது, 3 குடும்பங்களுக்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கும் இடையே நடக்கிறது. ஒரு குடும்பம் காங்கிரஸ் கட்சியையும், மற்றொரு குடும்பம் தேசிய மாநாட்டு கட்சியையும் மற்றொரு குடும்பம் மக்கள் ஜனநாயக கட்சியையும் சேர்ந்தது. இந்த குடும்பங்கள் பாவத்தை தவிர உங்களுக்கு என்ன செய்தனர். அவர்கள் மாநில இளைஞர்களை முன்னேற விடுவது கிடையாது. மாநிலத்தின் அடிமட்டம் வரை ஜனநாயகம் பரவி உள்ளது. வாரிசு அரசியல் கட்சிகள், புதிய தலைவர்களை உருவாக அனுமதிப்பது கிடையாது. அவர்கள் தங்களது வாரிசுகளை மட்டும் வளர அனுமதித்து மற்றவர்களை அழித்தனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
1982ம் ஆண்டு பிறகு தோடா மாவட்டம் சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

