மோடி வருகையால் ஹெலிகாப்டர் பயணம் தாமதம்: ஜனாதிபதியிடம் சோரன் கட்சி புகார்
மோடி வருகையால் ஹெலிகாப்டர் பயணம் தாமதம்: ஜனாதிபதியிடம் சோரன் கட்சி புகார்
ADDED : நவ 05, 2024 10:06 AM

ராஞ்சி: பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக, ஹேமந்த் சோரன் ஹெலிகாப்டர் தாமதமான விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று ஜே.எம்.எம்., கட்சி கோரியுள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் நட்சத்திர பிரசாரகர்களுக்கு சமமான களத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை நாடியுள்ளது.
கர்வா மற்றும் சாய்பாசாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்ததால், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, திரவுபதி முர்முவுக்கு அந்த கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் முதல்வர் பழங்குடி சமூகத்திலிருந்து வந்தவர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த நிலையை அடைந்தார். நீங்களும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாட்டின் உயரிய பதவியை அடைந்துள்ளீர்கள்.
எங்கள் நட்சத்திரப் பிரசாரகர் ஹேமந்த் சோரன், மதியம் 1.45 மணிக்கு மேற்கு சிங்பூமில் உள்ள குத்ரியில் ஒரு கூட்டத்தை நடத்திய பிறகு, சிம்டேகாவில் உள்ள பஜார் தாண்டில் பிற்பகல் 2.25 மணிக்கு தேர்தல் கூட்டத்தில் பேசத் திட்டமிட்டிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பேரணியில் பேசுவதற்காக பிற்பகல் 2.40 மணிக்கு சாய்பாசாவில் இருக்க வேண்டும். குத்ரிக்கும் சாய்பாசாவுக்கும் இடையே உள்ள தூரம் 80 கி.மீ., சிம்தேகாவுக்கு 90 கி.மீ. சோரனின் வருகைக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதமரின் பாதுகாப்பு நெறிமுறையை காரணம் காட்டி முதல்வரின் ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரம் பறக்க அனுமதிக்கப்படவில்லை.
பழங்குடியின மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து நட்சத்திர பிரசாரகர்களும் சமமான அரசியலமைப்பு பாதுகாப்பையும், மரியாதையையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

