ஜே.என்.யு., தேர்தல் தேதி முறைப்படி அறிவிப்பு நவ., 4ல் தேர்தல்; முடிவுகள் 6ல் வெளியாகும்
ஜே.என்.யு., தேர்தல் தேதி முறைப்படி அறிவிப்பு நவ., 4ல் தேர்தல்; முடிவுகள் 6ல் வெளியாகும்
ADDED : அக் 24, 2025 02:37 AM

புதுடில்லி:நடப்பு கல்வியாண்டிற்கான, 2025 - 26ம் ஆண்டிற்கான, டில்லி ஜவஹர்லால் நேரு மாணவர் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள், 6ம் தேதி வெளியாகுகின்றன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், இடதுசாரிகள் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பினர், நான்கு மத்திய குழு பதவிகளை பெற்றனர். அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு மாணவர் சங்கமான, ஏ.பி.வி.பி., பொதுச் செயலர் பதவியை கைப்பற்றியது.
தேர்தல் நடைமுறை இது, முந்தைய பத்தாண்டுகளில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு மாணவர் சங்கத்தின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான, அதாவது, 2025 - 26ம் ஆண்டிற்கான டில்லி ஜவஹர்லால் நேரு மாணவர் சங்கத்தின் தேர்தல் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. 'உத்தேச தேர்தல் தேதி' என அறிவிக்கப்பட்ட போதிலும், இது தான் இறுதியாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, தேர்தல் நடைமுறைகள் இன்று முதல் துவங்குகிறது. உத்தேச வேட்பாளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. அதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், இன்று காலை, 9:00 மணி துவங்கி, மாலை, 5:00 மணிக்குள் மேற்கொள்ளலாம்.
வேட்பு மனு வழங்குவது நாளை மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கும். அக்டோபர் 27ம் தேதி, காலை, 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மாணவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம்.
அதற்கு அடுத்த நாளான, அக்டோபர் 28 ம் தேதி, அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அந்த நாளிலேயே, காலை துவங்கி, மாலைக்குள் விரும்பும் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
இறுதி வேட்பாளர் பட்டியல், அன்று இரவு, 7:00 மணிக்கு நடக்கும். அதையடுத்து, விரிவான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிமுகம் நடக்கும். தேர்தல் பிரசாரம், அக்டோபர் 29 முதல், 31ம் தேதி வரை நடக்கும்.
பிரசாரம் இல்லை பாரம்பரியம் மிக்க நேரு பல்கலைக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம், நவம்பர் 1ம் தேதியும். அதிகம் எதிர்பார்க்கப்படும் தலைவர் விவாதம், நவம்பர் 2ம் தேதியும் நடக்கும். அதற்கு அடுத்த நாள், அதாவது நவம்பர் 3ம் தேதி, எவ்வித பிரசாரமும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
அதற்கு அடுத்த நாள், அதாவது, நவம்பர் 4ம் தேதி, ஓட்டுப்பதிவு நடக்கும். இது, இரண்டு கட்டங்களாக நடக்கும். காலை 9:00 மணி முதல், 1:00 மணி வரையிலும், அதன் பின், மதியம், 2:30 மணி முதல், 5:30 மணி வரையிலும் நடக்கும்.
ஓட்டு எண்ணிக்கை அன்று இரவே, 9:00 மணிக்கு துவங்கும். இறுதியில், தேர்வானவர்கள் பட்டியல், நவம்பர் 6ம் தேதி வெளியிடப்படும்.
இதற்கான அறிவிப்பை, தேர்தல் நடத்தும் கமிட்டியின் தலைவர் ரவி காந்த் நேற்று வெளியிட்டார்.

