வேலை ரெடி 10 லட்சம் பேருக்கு: 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
வேலை ரெடி 10 லட்சம் பேருக்கு: 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
UPDATED : ஆக 28, 2024 06:05 PM
ADDED : ஆக 28, 2024 04:47 PM

புதுடில்லி: நாட்டில் 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் 12 தொழில் நகரங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குர்பியா( உத்தரகண்ட்), ராஜ்புரா - பாட்டியாலா( பஞ்சாப்), திஹி( மஹாராஷ்டிரா) , பாலக்காடு(கேரளா), ஆக்ரா, பிரயாக்ராஜ்( உ.பி.,), கயா( பீஹார்), ஜாகீராபாத்(தெலுங்கானா), ஒரவகல், கோபார்த்தி(ஆந்திரா) மற்றும் ஜோத்பூர் - பாலி( ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் இந்த தொழில்நகரங்கள் அமைய உள்ளன.
இதன் பிறகு நிருபர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தேசிய தொழில்துறை காரிடர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 தொழிற்பேட்டை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக அரசு ரூ.28,602 கோடி முதலீடு செய்யும் இதன் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும்,30 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும். உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து உள்ளது. மின்னணு, மொபைல்போன் மற்றும் பாதுகாப்புதுறை சார்ந்த உற்பத்தி அனைத்தும் இந்தியாவை நோக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.