'ஜாலி'க்காக 300 கி.மீ., பயணித்த ஜானி: துணையை தேடி திரியும் காதல் புலி
'ஜாலி'க்காக 300 கி.மீ., பயணித்த ஜானி: துணையை தேடி திரியும் காதல் புலி
ADDED : நவ 20, 2024 06:26 AM

ஹைதராபாத் : குளிர்காலத்தில் இனச்சேர்க்கைக்காக துணையை தேடி, மஹாராஷ்டிராவில் இருந்து தெலுங்கானா காடுகள் வரை, 300 கி.மீ., துாரத்தை, 30 நாட்களில் ஜானி என்ற ஆண் புலி கடந்து வந்துள்ளது.
சரணாலயம்
குளிர்காலங்களில் புலிகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவது வழக்கம். அதற்காக பெண் துணையை தேடி, ஆண் புலிகள் நீண்ட துாரம் பயணிக்கும். அந்த வகையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்ற ஆண் புலியின் தேடல், தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள திப்பேஸ்வர் வனவிலங்கு சரணாலயத்தை சேர்ந்த ஆண் புலி ஜானி. இதற்கு, 6 - 8 வயது வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புலி, இனச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக துணையை தேடி, அக்., மூன்றாவது வாரத்தில் தன் பயணத்தை துவங்கியது. மஹாராஷ்டிர வனப்பகுதியில் தனக்கு ஏற்ற துணை கிடைக்காததால், வனப்பகுதியில் தேடலை தொடர்ந்தது.
கடந்த 30 நாட்களில், 300 கி.மீ., வரை பயணித்து தற்போது தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்ட வனப்பகுதிக்கு வந்துள்ளது. அதன் உடலில் பொருத்தப்பட்டுள்ள, 'ரேடியோ காலர்' கருவி வாயிலாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அடிலாபாத் வனத்துறை அதிகாரி பிரசாந்த் பாஜிராவ் பாட்டீல் கூறியதாவது: பெண் புலியின் உடலில் இருந்து கிளம்பும் ஒருவித நறுமணத்தை ஆண் புலிகள், 100 கி.மீ., தொலைவிலேயே கண்டுகொள்ளும். அதன் பின், அந்த பெண் புலியின் இருப்பிடம் நோக்கி நகரும்.
பதற்றம் வேண்டாம்
ஜானி புலி, தன் பயணத்தில் ஐந்து கால்நடைகளை அடித்து தின்றுள்ளது. மூன்று பசுக்களை வேட்டையாட முயற்சித்துள்ளது. துணையை தேடும் புலிகள், மனிதர்களை தாக்காது. இருப்பினும், உள்ளூர்வாசிகள் புலியை துரத்தி அதை பதற்றம் அடைய செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.