தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காங்கிரசில் உள்குத்து!

காங்கிரசில் உள்குத்து!

காங்கிரசில் உள்குத்து!


ADDED : ஆக 29, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இவர், அமெரிக்கா செல்ல முடிவெடுத்து, மத்திய அரசிடம் அனுமதி கேட்டார். அரசியல்வாதிகள் மற்றும் முதல்வர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு செல்ல வேண்டுமெனில், வெளியுறவுத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், இவரது வெளிநாட்டு பயணம் ரத்தானது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என, காங்., விமர்சித்தது.

எதனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை? இதற்கு காரணம், காங்., தான் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் 'கிசுகிசு'க்கப்படுகிறது. இது குறித்து, தெலுங்கானா காங்கிரஸ்காரர் ஒருவர் தான் மத்திய அரசுக்கு போட்டுக் கொடுத்து விட்டாராம். அந்த காங்., தலைவர் வெளியுறவு அமைச்சகத்திற்கு, 'இ - மெயில்' அனுப்பி, ரேவந்த் ரெட்டி அமெரிக்காவில் என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிவித்தாராம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேயராக உள்ளார். இவரையும், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார் ரேவந்த் ரெட்டி. ஹிந்து மத தலைவர்கள், அமெரிக்காவில் வந்து பிரசாரம் செய்தால் அதை அமெரிக்கா தடுக்க வேண்டும் என, ரேவந்த் ரெட்டி மம்தானியிடமும், வான்சிடமும் சொல்ல இருந்தார் என, இன்னொரு தெலுங்கானா காங்., தலைவர் வெளியுறவு அமைச்சகத்திற்கு போனில் தெரிவித்து விட்டாராம். இது தான் அனுமதி மறுப்பிற்கு காரணம் என, பேசப்படுகிறது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தமிழரான மீனாட்சி நடராஜன், தெலுங்கானாவிலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷனில் இவர் சமர்ப்பித்த வேட்புமனுவில், நிலுவையில் இருந்த ஒரு கிரிமினல் வழக்கை தெரிவிக்காமல் மறைத்து விட்டார் என, பா.ஜ., தலைவர்களுக்கு தெலுங்கானா காங்., தலைவர் ஒருவர் போட்டு கொடுத்து விட்டார். இதனால், இவரது வேட்புமனு நிராகரிப்பட்டது. இந்த ராஜ்யசபா, 'சீட்' பா.ஜ.,விற்கு சென்று விட்டது. இப்போது ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணம் ரத்து. இப்படி தன் தலையிலேயே மண்ணை வாரி கொட்டுவதில் காங்கிரசை யாரும் மிஞ்ச முடியாது.

***

எங்கே புத்தகங்கள்?

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு கலைஞர். ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், நிறைய புத்தகங்கள் படிப்பவர். மேற்கு வங்க சட்டசபை நுாலகத்திலிருந்து, பழமையான பல புத்தகங்களை முதல்வராக இருந்த போது படிக்க எடுத்துச் சென்றுள்ளார். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புத்தங்கங்களும் இதில் அடங்கும்.

ஆண்டுகள் பல ஆகியும், இந்த புத்தகங்களை மம்தா திருப்பி தரவில்லை. இந்த விவகாரம் மேற்கு வங்க சபாநாயகருக்கு தெரிய வந்தது. 'உடனடியாக புத்தகங்களை திருப்பி தரவும்' என, மம்தாவிற்கு சட்டசபை செயலர் கடிதம் எழுதி விட்டார். மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக பணியாற்றியவர் மம்தா. அப்போது சில புத்தகங்களை பார்லி., நுாலகத்திலிருந்து எடுத்துச் சென்று இதுவரை திருப்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம், பா.ஜ.,விற்கு லட்டு மாதிரி கிடைத்து விட்டது. மேற்கு வங்க சட்டசபையில் இது குறித்து, பா.ஜ.,வின் முதல்வர் சுவேந்து அதிகாரி பேச ஆரம்பித்து விட்டார். 'ராமர் கோவில் திருட்டு, ஓட்டு திருட்டு என சொன்னீர்களே... இந்த புத்தக திருட்டை பற்றி பேசலாமா?' என ஆரம்பித்து விட்டது பா.ஜ., இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலிக்க உள்ளதாம்.

'இந்த புத்தகங்கள் என் வீட்டில் இல்லை. முதல்வரின் அதிகாரப்பூர்வ அறையிலேயே உள்ளது' என, மம்தா கூறியுள்ளார். ஆனாலும், பா.ஜ., இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகிறது. இன்னொரு பக்கம், மம்தா பானர்ஜி எழுதிய புத்தகங்களை, மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் பள்ளி நுாலகங்களில் இருந்து அகற்ற, தற்போதைய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.

***

அதானிக்கு காங்., முதல்வர்கள் ஆதரவு!

கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லி வந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை அவர் சந்தித்தார். கட்சி தொடர்பான பல விஷயங்கள் பேசப்பட்டன. தொழிலதிபர் அதானி குறித்தும் சில விளக்கங்களை சிவகுமாரிடம் கேட்டார் ராகுல்.

'அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள். அதானிக்காக எதையும் செய்வார் மோடி' என, பிரசாரம் செய்து வருகிறார் ராகுல். 'வெளியே தான் இந்த எதிர்ப்பு. ஆனால், காங்., ஆளும் மாநிலங்களில் அதானிக்கு தான் முதலிடம்' என, பா.ஜ., கிண்டலடிக்க, கர்நாடக முதல்வர் சிவகுமார்- - அதானி சந்திப்பு, ராகுலுக்கு தலைவலியை உண்டாக்கி விட்டது.

கடந்த 23ல், தொழிலதிபர் அதானி, பெங்களூரில் முதல்வர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 'இது என் தனிப்பட்ட சந்திப்பு அல்ல. முதல்வர் என்ற முறையில், கர்நாடகாவில் அதானி முதலீடு செய்ய உள்ளார். அது தொடர்பாக தான் சந்தித்தேன்' என, ராகுலிடம் விளக்கம் அளித்தார் சிவகுமார்.

பெங்களூரின் சில்க் போர்டிலிருந்து, ஹெப்பால் வரை தரைக்கு அடியில், 22,276 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை தயாரித்துள்ளார் சிவகுமார். இந்த பாதை, பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் என்பது அவரின் கருத்து. இத்திட்டத்திற்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.

மற்ற கம்பெனிகளை விட, குறைந்த தொகையில் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக டெண்டரில் குறிப்பிட்டுள்ளது, அதானி குழுமம். இதனால் இவர்களுக்குத் தான் டெண்டர் கிடைக்கும். ஆனால், 'இத்திட்டத்தால் டிராபிக் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு தான் கிடைக்கும்; 2031ல் மீண்டும் நெரிசல் ஏற்படும்' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சிவகுமாரோ இத்திட்டத்தை செயல்படுத்தி, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என, நம்புகிறார்.

காங்., ஆட்சி செய்யும் தெலுங்கானாவிலும், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது அதானி குழுமம். ராகுலுக்கோ அதானி எதிரி; ஆனால், அவர் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களுக்கு அதானி தான், 'ஹீரோ!'

***

சோனியாவின் புத்தகத்திற்கு என்ன பிரச்னை?

காங்., மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதையான, 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற புத்தகம் நவம்பரில் வெளியாகிறது. ஆனால், அதற்கு முன் பிரச்னையில் சிக்கிவிட்டது. பிரபல ஆங்கில பதிப்பகமான, 'பெங்குயின்' நிறுவனம் சோனியாவின் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது. ஆனால், 'இப்போது புத்தகத்தை நாங்கள் வெளியிடவில்லை' என, தெரிவித்து விட்டது அந்நிறுவனம்.

என்ன பிரச்னை? புத்தகத்தில், பிரதமர் மோடியை சகட்டுமேனிக்கு சாடியுள்ளாராம் சோனியா. குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என்பதால், மோடியை, 'மரண வியாபாரி' என, குஜராத் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார் சோனியா. ஆனால், அத்தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்தது. இது தவிர, தன்னை எப்படி பா.ஜ.,வும், மோடியும் கேவலமாக வர்ணித்தனர் என்பது முதல், பல விஷயங்களை மோடிக்கு எதிராக எழுதி உள்ளாராம்.

இதனால் பதிப்பகத்திற்கு பிரச்னை வரலாம் என்பதால், சிலவற்றை நீக்குமாறு பதிப்பகம் கோரியதாம். ஆனால், சோனியா மறுத்து விட்டாராம். பதிப்பகத்திற்கு பா.ஜ.,வும், பிரதமரும் நெருக்கடி தருகின்றனர் என, காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

'இதே பெங்குயின் நிறுவனத்தின் அமெரிக்க அமைப்பு, சோனியாவின் சுயசரிதையை எந்தவித மாற்றமும் செய்யாமல், அப்படியே வெளிநாடுகளில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. அப்படியிருக்க, இந்திய பெங்குயின் ஏன் இப்படி செய்கிறது?' என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறொரு பதிப்பகம் சோனியாவின் சுயசரிதையை வெளியிட முன்வந்துள்ளது.

'மோடிக்கு எதிராக காங்., இதுவரை தேர்தல்களிலும், பொது மேடைகளிலும் செய்த பிரசாரத்தால், பா.ஜ., தான் வெற்றி பெற்றது; எனவே, இந்த புத்தகத்தில் என்ன கூறியிருந்தாலும், அது பா.ஜ.,விற்கு லாபம்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us