ஆதரவு 14 பேர்; எதிர்ப்பு 11 பேர்; பார்லி கூட்டுக்குழுவில் வக்பு திருத்த மசோதா ஏற்பு!
ஆதரவு 14 பேர்; எதிர்ப்பு 11 பேர்; பார்லி கூட்டுக்குழுவில் வக்பு திருத்த மசோதா ஏற்பு!
ADDED : ஜன 29, 2025 12:39 PM

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடு முழுதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த ஆறு மாதங்களாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், வக்பு சொத்துக்கள் தொடர்புடைய தரப்பினர், சட்ட வல்லுனர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களை கேட்டது. இந்நிலையில், இன்று திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் வக்பு வாரிய மசோதா பார்லி., கூட்டுக்குழுவால் ஏற்கப்பட்டுள்ளது.
இது குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது: வக்பு மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில், பெரும்பான்மை உறுப்பினர்களால் வரைவு அறிக்கை, திருத்த மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்க கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்தோம். நாங்கள் இதை நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்போகிறோம்,'' என்றார்.
பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''வக்பு திருத்த மசோதா இன்று இறுதி செய்யப்பட்டது. வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்,'' என்றார்.
தி.மு.க., எம்.பி., ராஜா கூறுகையில், ''நேற்று இரவு 9.50 மணிக்கு எங்களிடம் வரைவு அறிக்கை தரப்பட்டது. ஒரே இரவில் எப்படி நாங்கள் அறிக்கை தர முடியும்,'' என்றார்.
பா.ஜ., எம்.பி., ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறுகையில், ''வக்பு திருத்த மசோதா, ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 25 பேரில், 14 பேர் ஆதரித்ததால் திருத்த மசோதா ஏற்கப்பட்டது. சில கட்சிகள் ஆட்சேபனை குறிப்புகளை தெரிவித்துள்ளன,'' என்றார்.