ஆயுள் தண்டனை கைதி திருமணம் செய்ய 'பரோல்' காதலிக்கு நீதிபதி பாராட்டு
ஆயுள் தண்டனை கைதி திருமணம் செய்ய 'பரோல்' காதலிக்கு நீதிபதி பாராட்டு
ADDED : ஜூலை 13, 2025 01:22 AM
திருவனந்தபுரம், :கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற பின்னரும், காதலை கைவிடாத பெண்ணுக்காக, கைதிக்கு 15 நாள், 'பரோல்' அனுமதித்து, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் பிரசாந்த், 29. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கொலை வழக்கில் இவருக்கு திருச்சூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காதலியை திருமணம் செய்ய தனக்கு அனுமதி வழங்கும்படி, சிறை நிர்வாகத்திற்கு பிரசாந்த் அளித்த மனுவை, சிறை நிர்வாகம் நிராகரித்தது.
பிரசாந்தின் தாய், கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தன்னுடைய மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும், அவரை பரோலில் விட அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 15 நாள் பரோல் அனுமதித்து உத்தரவிட்டார்.
நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியை, திருமணம் செய்ய முன்வந்த பெண்ணுக்காக நான் பரோல் அளிக்கிறேன்.
கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும், தன் காதலை கைவிடாத பெண்ணை பாராட்டுகிறேன். அவரது இந்த உறுதியான நிலைப்பாட்டை நீதிமன்றத்தால் புறக்கணிக்க முடியாது.
'உறுதியான காதலுக்கு முன், எந்த தடைகளும் கிடையாது. அது எல்லைகளையும், சுவர்களையும் உடைத்து இலக்கை அடைகிறது' என, பிரபல அமெரிக்க பெண் கவிஞர் மாயா ஆஞ்சலோ கவிதை எழுதியுள்ளார். அதை, இப்போது இங்கு நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

