ADDED : ஜூலை 10, 2025 10:22 PM
புதுடில்லி:''கடந்த 2007ல் ஹோட்டல் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இன்னமும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளனர்.
''குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ள போலீசாரின் செயல்பாட்டை ஆதரிக்க முடியாது,'' என, நீதித்துறை மாஜிஸ்திரேட் பாரதி பெனிவால் நேற்று உத்தரவிட்டார்.
டில்லி ஆஜ்மீரி கேட் என்ற பகுதியில், மோகன் ஹோட்டல் என்ற இடத்தில் பணியாற்றிய, 30 - 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், 2007 ஜூலை 30ல் இறந்து கிடந்தார். அவர் தலையின் பின்புறம் இருந்த வெட்டுக்காயம், அவர் கொல்லப்பட்டதை காட்டியது.
இந்த வழக்கின் உடற்கூறு அறிக்கை நேற்று மாஜிஸ்திரேட் பாரதி பெனிவால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
இந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. எனினும், இப்போது வரை இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் நடந்து, இத்தனை ஆண்டுகளாக குற்றவாளியை கைதும் செய்யவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு கூட போலீசார் சென்று பார்க்கவில்லை.
இது வேண்டுமென்றே நடந்தது போல இருக்கிறது. குற்றவாளிக்கு சாதகமாக போலீசார் நடந்து கொண்டனர் என்பதை அறிய முடிகிறது.
கொலை செய்யப்பட்டார் என தெரிந்தும், இந்த வழக்கில் எதுவும் செய்யாமல் இருந்ததால், போலீசார் வேண்டுமென்றே அமைதியாக இருந்தது அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற அலட்சியத்தை, அப்பாவி உயிர் போனதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
எனவே, சம்பந்தப்பட்ட போலீசார், அடுத்த மூன்று வாரங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கை, ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

