அலட்சிய மனுவால் நீதிபதிகள் கோபம்; வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
அலட்சிய மனுவால் நீதிபதிகள் கோபம்; வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
UPDATED : ஏப் 23, 2025 03:45 AM
ADDED : ஏப் 23, 2025 03:43 AM

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டு இருந்த நிவாரணத்தால் எரிச்சலடைந்த நீதிபதிகள், அதை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
குடும்ப தகராறு தொடர்பான வழக்கில், நேஹா டோடி என்பவருக்கு மும்பை குடும்பநல நீதிமன்றம், 2019ல் வழங்கிய நிவாரணங்களுக்கு தடை விதிக்கக்கோரி, சந்தீப் டோடி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் நிவாரணம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமைக்கு அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமையை இந்த சட்டப்பிரிவு அளிக்கிறது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா பிறப்பித்த உத்தரவு: விவேகமுள்ள வழக்கறிஞர்கள் அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவின் கீழ் இதுபோன்ற அற்பமான மனுவை தாக்கல் செய்ய மாட்டார்கள். நீதிமன்றத்தின் சூழலையே நீங்கள் கெடுத்துவிட்டீர்கள்.
இந்த மனுவை நீங்கள் எளிமையாக திரும்பப் பெற அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சந்தீப் டோடிக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். அதை நான்கு வாரங்களுக்குள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.