விளக்கம் கிடைத்த பின் நடவடிக்கை திலீப் விவகாரத்தில் நீதிபதிகள் உறுதி
விளக்கம் கிடைத்த பின் நடவடிக்கை திலீப் விவகாரத்தில் நீதிபதிகள் உறுதி
ADDED : டிச 14, 2024 02:51 AM
சபரிமலை:சபரிமலையில் பக்தர்களை தடுத்து நிறுத்தி நடிகர் திலீப்பை ஏழு நிமிட நேரம் தரிசனம் செய்ய அனுமதியளித்ததற்கு தேவசம் அதிகாரிகள் மற்றும் இரண்டு காவலர்கள் விளக்கம் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிச., 5ல் சபரிமலை வந்த நடிகர் திலீப் ஹரிவராசனம் பாடல் பாடிய போது முன்வரிசையில் நின்றார். இதற்காக வரிசையில் வந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும் போலீஸ் துறையும் தனித்தனியாக விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் அந்த நேரத்தில் அங்கு பதிவான சி.சி.டி.வி. காட்சிகளின் ஒளிப்பதிவை நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் கூறியது: நடிகர் திலீப் 7 நிமிடம் 11 வினாடிகள் சன்னதி முன் முதல் வரிசையில் நின்றுள்ளார். இந்த நேரத்தில் பக்தர்களை தேவசம்போர்டு காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்பகுதியில் போலீஸ் இருந்தும் இந்த விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருந்துள்ளனர். இது தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் உயர்நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தேவசம்போர்டு வழக்கறிஞர், அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைக்க தேவசம்போர்டு முயற்சிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.
எனினும் சபரிமலை நிர்வாக அதிகாரி, உதவி செயல் அலுவலர், பக்தர்களை தடுத்த தேவசம் காவலர்கள் பிஜு போஸ், ஷைன் டி ராஜ் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விளக்கம் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்

