நீதிபதிகளின் ஓய்வூதியம் பரிதாபத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகளின் ஓய்வூதியம் பரிதாபத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட்
ADDED : டிச 19, 2024 02:58 AM

புதுடில்லி :'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்துக்குரியது' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, 6,000 முதல் 15,000 ரூபாய் வரையே ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் அவர்கள் ஆற்றிய சேவை, ஓய்வூதிய பலன்களில் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கும்படியும், அதற்குள் இந்த விவகாரத்துக்கு அரசு தீர்வு காண முயற்சிக்கும் என்றும் கோரினார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தீர்வு காணும்படி அரசை வலியுறுத்துங்கள்; இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும்.
இந்த வழக்கில் நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவு, தனிப்பட்ட மனுக்களுக்கு மட்டுமின்றி ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.