நீதிபதிகள் நடுநிலை தவறக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
நீதிபதிகள் நடுநிலை தவறக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
ADDED : அக் 21, 2024 06:49 AM

ஆமதாபாத் : நீதித்துறை ஒழுக்க நெறிகள் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை நீதித்துறையின் அடிப்படை தூண்களாகும். பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல், நடுநிலையுடன் நீதிபதிகள் செயல்பட வேண்டும், என, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் வலியுறுத்தினார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த, நீதிபதிகளுக்கான ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது: நீதித்துறை ஒழுக்க நெறிகள் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவையே, நீதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் அடிப்படை தூண்களாகும். நீதிமன்றத்தில் இருக்கும்போதும், வெளியே இருக்கும்போதும், நீதிபதிகள், இந்த உயர்ந்த குணங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை புகழ்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுபோலவே, பாலினம், மதம், ஜாதி, அரசியல் உள்ளிட்டவை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தற்போது நீதிமன்ற விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பாகின்றன. அதனால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு, சர்ச்சை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
நீதிபதிகள் பாரபட்சமாக செயல்படுவதாக சந்தேகம் எழும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு, நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, உடனே தேர்தலில் பங்கேற்பது, அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும்.
விசாரணை தாமதமாவது, இழுத்தடிப்பு செய்வது போன்றவை, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும்.
இது, நீதித்துறைக்கு வெளியே நீதியைத் தேடுவதாக அமைந்துவிடும். இது பல மோசடிகளை, பிரச்னைகளை உருவாக்கிவிடும்.
இவ்வாறு பேசினார்.

