முனிரத்னாவுக்கு நிபந்தனை ஜாமின் 2வது வழக்கில் இன்று தீர்ப்பு
முனிரத்னாவுக்கு நிபந்தனை ஜாமின் 2வது வழக்கில் இன்று தீர்ப்பு
ADDED : செப் 19, 2024 06:05 AM

பெங்களூரு: ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவின் ஜாமின் மனு மீது, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
பெங்களூரு மாநகராட்சி பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர் சலுவராஜு, 44. குப்பை மேலாண்மை செய்யும் பணிக்காக, ஒப்பந்தம் பெற்று தருவதற்கு, 30 லட்சம் ரூபாய் கமிஷன் தரும்படி, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மிரட்டுவதாக, குற்றஞ்சாட்டினார்.
மேலும், அவரது மனைவியை தவறாக குறிப்பிட்டும், ஜாதி பெயரை கேவலப்படுத்தியும்; காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கர் குறித்தும் தவறாக பேசியதாகவும், இருவரும் வயாலிகாவல் போலீசில் இரண்டு தனி தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, முனிரத்னாவை கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், ஜாமின் வழங்கும்படி, பெங்., மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், முனிரத்னா தரப்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீது நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், நேற்று விசாரணை நடத்தினார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பிரதீப்குமார், கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கரின் சமுதாய பெயர் சொல்லி திட்டிய வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.