கல்லுாரியில் மாணவி பலாத்காரம் ஜூனியர் மாணவர் கைது
கல்லுாரியில் மாணவி பலாத்காரம் ஜூனியர் மாணவர் கைது
ADDED : அக் 18, 2025 07:46 AM

பெங்களூரு: பெங்களூரில் கல்லுாரியின் கழிப்பறைக்குள், இன்ஜினியரிங் மாணவியை பலாத்காரம் செய்த, ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, ஹனுமந்தநகரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்தவர் ஜீவன் கவுடா, 21. இதே கல்லுாரியில், 22 வயது இளம்பெண், இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். ஜீவனுக்கும், மாணவிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகினர்.
கடந்த 10ம் தேதி மதியம் 2:00 மணியளவில், கல்லுாரியின் தரை தளத்தில் மாணவியை, ஜீவன் சந்தித்தார். 'உன்னிடம் பேச வேண்டும்' என்று கூறி மாணவியை, கல்லுாரியின் 7வது மாடிக்கு ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், முத்தம் கொடுக்கவும் முயன்றுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மாணவி ஏழாவது மாடியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக ஓடி வந்தார். அவரை விரட்டிச் சென்ற ஜீவன், ஆறாவது மாடியில் உள்ள கழிப்பறைக்குள் இழுத்துச் சென்றார். கதவை உள்பக்கமாக பூட்டி, மாணவியின் மொபைல் போனை பறித்ததுடன், அவரை மிரட்டி பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பினார்.
இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினால், அதிர்ச்சி அடைவர் என்று நினைத்த மாணவி, யாரிடமும் கூறாமல் இருந்தார். கடந்த 14ம் தேதி தன் தோழிகள் சிலரிடம் கூறினார். மாணவிக்கு தைரியம் கொடுத்த தோழிகள், போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர்.
தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறிய மாணவி, அவர்கள் உதவியுடன் ஹனுமந்தநகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜீவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.