உங்க வேலைய மட்டும் பாருங்க... அமெரிக்காவின் விஷமக்கருத்துக்கு இந்தியா பதிலடி
உங்க வேலைய மட்டும் பாருங்க... அமெரிக்காவின் விஷமக்கருத்துக்கு இந்தியா பதிலடி
ADDED : அக் 03, 2024 10:00 PM

புதுடில்லி: இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் (யுஎஸ்சிஐஆர்எப்) அறிக்கையை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அமைப்பு ஒரு தலைபட்சமாக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது என குற்றம்சாட்டி உள்ளது.
இந்த அமைப்பானது, இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்துவருவதாக கூறியதுடன், குறிப்பிடத்தக்க கவலை கொள்ள வேண்டிய நாடு என பட்டியலிட வேண்டும் என கூறியிருந்தது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்த அமைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். இது அரசியல் திட்டத்துடன் செயல்படும் ஒரு தலைபட்சமான அமைப்பு.
இதன் அறிக்கையானது இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. இது போன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் அந்த அமைப்பு பயன் பெறும். இவ்வாறு ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

