பணமூட்டை விவகாரத்தில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
பணமூட்டை விவகாரத்தில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்டில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
ADDED : ஜூலை 19, 2025 02:07 AM
புதுடில்லி: பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிரான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டில்லி வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டதும், பாதி எரிந்த நிலையில் மூட்டை, மூட்டையாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனால், அவரது நேர்மை கேள்விக்குறியான நிலையில், விசாரணை கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பார்லிமென்டுக்கு பரிந்துரைத்தார்.
இந்நிலையில், இந்நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தீ விபத்து நடந்தபோது பாதி எரிந்த நிலையில் பண மூட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது எனக்கு சொந்தமானது தான் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் அப்போது சேகரிக்கப்படவில்லை. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்யவோ, அதற்கான ஆவணத்தை தயார் செய்து சட்டத்தின் பார்வைக்கு வைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனினும் தீயணைப்புத் துறை அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. இந்த விவகாரத்தில் நீதிக்கான அடிப்படை கொள்கை மீறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்னை தனியாக அழைத்து விசாரிக்கவில்லை. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பார்க்கவோ, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே எனக்கு அனுமதி தரவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை.
வீட்டில் இருந்த பணம் யாருடையது? அதை யார் வைத்தது? எவ்வளவு தொகை? தீ விபத்துக்கு உண்மையான காரணம் என்ன? என பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை.
வேண்டுமென்றே இதில் என்னை சிக்க வைக்க சதி நடந்திருக்கிறது. மேலும் இந்த விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு கசிந்திருக்கிறது. இது நான் வகிக்கும் பதவிக்கு அவப்பெயரையும், மீளமுடியா மன துயரத்தையும் கொடுத்திருக்கிறது.
தவிர, விசாரணை கமிட்டியின் அறிக்கைக்கு பதிலளிக்க இரண்டு நாட்கள் மட்டுமே எனக்கு அவகாசம் தரப்பட்டது. அதற்குள் பதவியில் இருந்து விலகுமாறும் அழுத்தம் தரப்பட்டது.
எனக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும். நீதிபதிகளின் கண்ணியத்தை காப்பதற்கு அரசியல் அமைப்பு வழங்கிய பாதுகாப்பை நீதித் துறையே மீறுவது போல் ஆகும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.