கைலாஷ் கெலாட் வருகை : ஆம் ஆத்மியின் 25 தொகுதிகளை கைப்பற்றும் பா.ஜ.,
கைலாஷ் கெலாட் வருகை : ஆம் ஆத்மியின் 25 தொகுதிகளை கைப்பற்றும் பா.ஜ.,
ADDED : நவ 19, 2024 07:46 PM
நஜாப்கர்:ஆதிஷி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கைலாஷ் கெலாட் பா.ஜ.,வில் இணைந்தது, ஆம் ஆத்மிக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே அக்கட்சி ஆதிக்கம் உள்ள டில்லி டெஹாட் பகுதியின் 25 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும் என கருதப்படுகிறது.
ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கைலாஷ் கெலாட், 50. டில்லியின் புறநகர் பகுதியான நஜாப்கர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக கைலாஷ் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் கைலாஷ் திடீரென இணைந்தார். இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அத்துடன் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்த கைலாஷின் விலகல், ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ள ஆம் ஆத்மி, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறியுள்ளது.
கைலாஷ் விலகியதால், டில்லியின் புறநகர் பகுதியான டில்லி டெஹாட் பகுதியைச் சார்ந்த 25 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வெற்றி பாதிக்கப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தத் தொகுதிகள், பா.ஜ., வசமாகலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
நஜாப்கர், நங்லோய், மத்தியாலா, பவானா, பதர்பூர், துகல்காபாத், மெஹ்ராலி, நரேலா, சுல்தான்பூர் மஜ்ரா, பால்ஸ்வா உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கியது, டில்லி டெஹாட்.
டெஹாட் பகுதியின் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜாட் மற்றும் குஜ்ஜார் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் மதிக்கும் தலைவராக கைலாஷ் கெலாட் திகழ்கிறார்.
இதனால் அவர் சார்ந்த மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி துரிதமாக இறங்கியது. முதலில் கைலாஷ் சமூகமான ஜாட் இனத்தைச் சேர்ந்த ரகுவிந்தர் ஷோகீனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரகுவிந்தர் ஷோகீன், நங்லோய் தொகுதியின் எம்.எல்.ஏ., இந்தத் தொகுதியும் டெஹாட் பகுதிக்குள் வருகிறது. இந்த பகுதிக்கு ஆம் ஆத்மி தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது என்பதை, மக்களுக்கு உணர்த்தவும் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படுகிறது.
இந்த பகுதியில் 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளையும் ஆம் ஆத்மி கைப்பற்றியது. ஆனால் வரும் பிப்ரவரியில் நடக்கும் சட்டசபை தேர்தலில் முடிவுகள் மாறும் என கூறப்படுகிறது.
கைலாஷ் கெலாட் வருகை குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். டில்லியின் டெஹாட் தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
முன்னாள் எம்.பி.,க்களான ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா உள்ளிட்ட தலைவர்களை களமிறக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. இவர்கள் ஆம் ஆத்மி அரசின் தோல்விகளை பட்டியலிட்டு, டில்லியின் கிராமப்புற தொகுதிகளில் பிரசாரம் செய்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.