ADDED : செப் 30, 2024 10:43 PM

காலபைரவர் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது பைரவரின் வாகனமாக இருக்கும் நாய் தான். காலபைரவருக்கு அனைத்து இடங்களிலும் கோவில் இருந்தாலும், மாண்டியா காலபைரேஸ்வரர் கோவிலில் ஏராளமான சிறப்புகள் உள்ளன.
மாண்டியாவின் நாகமங்களா பெல்லுார் டவுனில் ஆதிசுஞ்சனகிரி என்ற இடத்தில், கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரமான இடத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பஞ்ச தீபம்
ஆறு தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து, இந்த கோவிலுக்கு வந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1993ல் கோவில் புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. 2008ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆதி ருத்ரராகிய சிவன், ஆதிசுஞ்சனகிரி மலைக்கு தவம் செய்ய வந்தபோது, அங்கு இருந்த சித்தயோகிக்கு கோவில் அமைந்திருக்கும் இடத்தை கொடுத்து, இங்கு அமையும் கோவிலில் பஞ்சலிங்க வடிவில் காட்சி தருவேன் என்று கூறி உள்ளார்.
சிவன் கூறியபடி தற்போது கோவிலில் கங்காதரேஸ்வரர், மல்லேஸ்வரர், சோமேஸ்வரர், சித்தேஸ்வர், சந்திரமவுலீஸ்வரர் என ஐந்து அவதாரங்களை கொண்டு பஞ்சலிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கோவிலில் பிந்து சரோவரா புஷ்கரணி உள்ளது. குழந்தை இல்லாத தம்பதி, காலபைரவரை நன்கு வேண்டி கொண்டு, புனித நீராடினால் நினைத்தது நடக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
64 வகை
இக்கோவில் நான்கு பெரிய கோபுரங்களை கொண்டுள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் 172 துாண்கள் உள்ளன.
ஒவ்வொரு துாணிலும் நான்கு அடி உயரத்தில் 64 வகையான காலபைரவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. ஸ்தம்பம்பிகா தேவியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேவியை வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு அமாவாசை, சிவராத்திரியின்போது கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை காலபைரேஸ்வர் தெப்ப உற்சவம், கங்காதரசாமிக்கு தேரோட்டம் நடக்கிறது.
- நமது நிருபர் -