ADDED : நவ 17, 2024 11:06 PM

கலபுரகி: பா.ஜ., -- எம்.எல்.ஏ., எத்னாலின் சர்க்கரை ஆலைக்கு அரசு சீல் வைத்துள்ளதால், அந்த ஆலையில் அரவைக்காக இருந்த கரும்புகளை, வேறு ஆலைகளுக்கு மாற்றம் செய்து, கரும்பு விவசாயிகளுக்கு கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம் உதவி செய்துள்ளார்.
விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை கலபுரகி சிஞ்சோலியில் உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகாரின்படி, நான்கு மாதங்களுக்கு முன்பு ஆலைக்கு, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து எத்னால் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. ஆனால், அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், கலபுரகி மாவட்ட கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புகளை, எத்னாலின் ஆலையில் அரவைக்காக கொடுத்து இருந்தனர். ஆனால் சர்க்கரை ஆலை மூடப்பட்டு இருப்பதால், அரவைக்கு கொடுத்த கரும்புகள் வீணாகப் போகும் என்று கவலை அடைந்தனர். இதுபற்றி கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து சர்க்கரை ஆலையில் உள்ள கரும்புகளை, வேறு ஆலைகளுக்கு அரவைக்கு மாற்ற கலெக்டர் உத்தரவிட்டார். தற்போது கரும்புகளை வேறு ஆலைக்கு மாற்றும் பணி நடக்கிறது. கலெக்டரின் நடவடிக்கைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.