கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடையில்லை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடையில்லை
UPDATED : டிச 17, 2024 06:57 PM
ADDED : டிச 17, 2024 03:22 PM

புதுடில்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இது குறித்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக போலீசாரின் விசாரணை முடிந்துவிட்டது. தமிழக போலீசாரின் விசாரணையில் எவ்வித தவறும் இல்லை என விளக்கம் கொடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு, சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடையில்லை.