அனந்தகுமார் ஹெக்டேவுக்கு 'கல்தா?' உத்தர கன்னடாவுக்கு புதிய வேட்பாளர்!
அனந்தகுமார் ஹெக்டேவுக்கு 'கல்தா?' உத்தர கன்னடாவுக்கு புதிய வேட்பாளர்!
ADDED : மார் 12, 2024 03:15 AM

உத்தரகன்னடா: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு பதிலாக, சிந்தனையாளர் சக்கரவர்த்தி சூலிபெலே, உத்தரகன்னடா வேட்பாளராவார் என, தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை வெற்றி பெற்ற பின், உத்தரகன்னடா எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, தொகுதிக்காக பணியாற்றவில்லை. தொகுதியிலும் தென்படவில்லை.
வதந்தி
கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களிலும் இவரை காண முடியவில்லை. இம்முறை இவர் போட்டியிட மாட்டார் என, வதந்தி பரவியது. எனவே பலரும் உத்தரகன்னடா தொகுதியில் சீட் பெற முயற்சித்தனர். ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கியதும், திடீரென தொகுதியில் அனந்தகுமார் ஹெக்டே தென்பட துவங்கினார்.
தானே வேட்பாளர் என, கூறிக்கொண்டு பிரசாரமும் செய்கிறார். கட்சி கூட்டங்களில் பங்கேற்கிறார். நான்கரை ஆண்டுகளாக, கட்சியை பலப்படுத்தாத இவருக்கு, இம்முறை சீட் கொடுக்கக் கூடாது.
முயற்சி
மாற்று வேட்பாளரை களமிறக்கும்படி, கட்சி மேலிடத்துக்கு உள்ளூர் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். அது மட்டுமின்றி, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார்.
சமீபத்தில், 'மத்தியில் பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தால், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்' எனக் கூறி, சொந்த கட்சியினர் கோபத்துக்கு ஆளானார்.
எனவே வேறொருவரை களமிறக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. சிந்தனையாளர் சக்கிரவர்த்தி சூலிபெலேவை, உத்தரகன்னடா தொகுதியில் களமிறக்க வாய்ப்புள்ளது.
இதற்கு முன்பும் இவரை வேட்பாளராக்க முயற்சி நடந்தது. அப்போது இவர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காண்பிக்கவில்லை.
கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக, மாநிலம் முழுதும் பிரசாரம் செய்தார்.
இம்முறையும் சக்கிரவர்த்தி சூலிபெலே, பிரசாரத்தை துவக்கியுள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற, தன் முடிவை தளர்த்தியுள்ளார். எனவே இவரை உத்தரகன்னடா வேட்பாளராக்க, தீவிர முயற்சி நடக்கிறது.

