ADDED : பிப் 22, 2024 11:01 PM

மைசூரு பெயரை கேட்டால், அரண்மனைகள், தசரா திருவிழா நினைவுக்கு வரும். ஆனால் இங்கு புராதன, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களும், அதிக எண்ணிக்கையில் உள்ளன.
ஒவ்வொன்றும் தனித்தனி மகத்துவம் கொண்டவை. இத்தகைய கோவில்களில் காமகாமேஸ்வரி கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் நுாற்றாண்டு வரலாறு கொண்டது.
மைசூரு மஹாராஜா சாமராஜேந்திர உடையார், ஒரு முறை நேபாளம் காட்மாண்டுக்கு சென்றிருந்தார். அப்போது இங்குள்ள ராமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி கோவிலை தரிசனம் செய்தார்.
தனக்கு ஆண் வாரிசு பிறந்தால், இதுபோன்ற கோவிலை மைசூரில் கட்டுவதாக பிரார்த்தனை செய்து கொண்டார்.
வேண்டியபடியே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தான் பிரார்த்தனை செய்தபடி மைசூரில் கோவில் கட்டினார். 1942ல் மைசூரின், அக்ரஹாராவில் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். 1954ல் கோவில் கட்டி முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு காமகாமேஸ்வரி கோவில் என, பெயர் சூட்டப்பட்டது.
கோவிலின் மூலஸ்தானத்தில் ராமேஸ்வரர், காமேஸ்வரி, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்புறத்தில், சிவன் அவதாரங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி விக்ரகமும் உள்ளது.
காமேஸ்வரா என்றால், விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்று அர்த்தமாகும். திருமணம் தாமதமானவர்கள், திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால், திருமணமாகும், குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அனைத்து நாட்களிலும், காமகாமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
- நமது நிருபர் -.