பா.ஜ.,வில் இணைகிறார் கமல்நாத்? காங்கிரசில் உச்சக்கட்ட பரபரப்பு!
பா.ஜ.,வில் இணைகிறார் கமல்நாத்? காங்கிரசில் உச்சக்கட்ட பரபரப்பு!
ADDED : பிப் 18, 2024 01:20 AM

புதுடில்லி, காங்., மூத்த தலைவர் கமல்நாத், தன் மகனுடன், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரசில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக உள்ள மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், 77, கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய உள்ளதாக, கடந்த சில நாட்களாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர், மாநில முதல்வர், ஒன்பது முறை எம்.பி., என, காங்கிரசில் கோலாச்சி வந்தார் கமல்நாத். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜ்யசபாவுக்கு காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கமல்நாத் எதிர்பார்த்திருந்தார்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் கமல்நாத், ஒன்பது முறை வென்றுள்ளார். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள, 29 தொகுதிகளில் 28ல் பா.ஜ., வென்றது. சிந்த்வாரா தொகுதியில், கமல்நாத்தின் மகன் நகுல் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வென்றார்.
வரும் லோக்சபா தேர்தலில் மகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா, கிடைத்தால் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் கமல்நாத்துக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய பிரதேச பா.ஜ., தலைவர் வி.டி.சர்மா, ''அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காங்கிரஸ் புறக்கணித்தது, அக்கட்சியினருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்றவர்கள் பா.ஜ.,வில் சேர முன்வருகின்றனர்,'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க, தன் சமூக வலைதள கணக்குகளில், தன் சுய குறிப்புகளில் காங்கிரஸ் பெயரை, நகுல் நீக்கியுள்ளார். மேலும், 'வரும் தேர்தலில் கமல்நாத் போட்டியிட மாட்டார். ஆனால், சிந்த்வாரா தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்' என்று நகுல் நாத் கூறியுள்ளார்.
இந்த அரசியல் நகர்வுகளை அடுத்து, கமல்நாத் மற்றும் அவருடைய மகன் நகுல் நாத், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதை உறுதி செய்யும் வகையில், டில்லிக்கு கமல்நாத் நேற்று வந்தார்.
நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ''நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. நீங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. ஏதாவது இருந்தால், முதலில் உங்களிடம் தான் தெரிவிப்பேன்,'' என, கமல்நாத் குறிப்பிட்டார்.
இது குறித்து மத்திய பிரதேச காங்., தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், ''கமல்நாத் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டபோது அவரை, 'என் மூன்றாவது மகன்' என, அப்போதைய பிரதமர் இந்திரா புகழ்ந்தார். அப்படிப்பட்டவர், காங்கிரசிலிருந்து விலக மாட்டார்,'' என்றார்.