ஹலோ, நாங்க போலீஸ்... போன் அழைப்பால் ரூ.90,000 இழந்த டி.ஜி.பி., மனைவி!
ஹலோ, நாங்க போலீஸ்... போன் அழைப்பால் ரூ.90,000 இழந்த டி.ஜி.பி., மனைவி!
ADDED : செப் 25, 2024 11:54 AM

சென்னை: மறைந்த டி.ஜி.பி., மனைவியிடம் ரூபாய் 90,000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.டி.எம் கார்டு
மொபைல் போன் வைத்திருக்கும் பலருக்கும் எங்கெங்கோ இருந்து அநாமதேய அழைப்பு வரும். அதில் பேசுபவர், 'உங்கள் ஏ.டி.எம்., கார்டு மேலே உள்ள நம்பர் சொல்லு, இல்ல லாக் பண்ணிடுவேன்' என்று தமிழை கொலையாய் கொன்று பேசுவார். அப்படி பேசும்போதே தெரிந்து கொள்ளலாம்; அது மோசடி அழைப்பு என்று.
நம்மில் பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். பலர் அதை உண்மை என்றோ அல்லது போதிய விழிப்புணர்வு இன்றோ நம்பி ஏமாந்து போனதும் உண்டு.
மும்பை போலீஸ்
அந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக மறைந்த டிஜி.பி.,யின் மனைவியும் இணைந்துள்ளார். அவரது பெயர் டாக்டர் கமலி. மறைந்த டி.ஜி.பி. ஸ்ரீபாலின் மனைவி. சென்னை தி. நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், 'மும்பை போலீசில் இருந்து அழைக்கிறோம், உங்களின் மொபைல்போன் எண் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம்' என்று கூறியுள்ளனர்.
ரூ.90,000
'2 மணி நேரத்தில் அந்த செல்போன் எண் செயலிழக்கும்' என்று மிரட்டல் விடுத்தனர். 'உங்களது வங்கி கணக்கை சரிபார்க்க ரூ.90,000 அனுப்ப வேண்டும், பின்னர் அந்த பணம் திரும்ப தரப்படும்' என்று மர்ம நபர் கூறி உள்ளார்.
புகார்
இதை நம்பிய டாக்டர் கமலி, 'பணத்தை G pay மூலம் அனுப்பி இருக்கிறார். இப்படி ஒரு நபர் போன் செய்து பேசியதையும், பணம் அனுப்பியதையும் அவர் தமது குடும்ப உறுப்பினர்களிடம் கூறி உள்ளார். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டது தெரியவர, போலீசின் உதவியை நாடி புகாரும் அளித்துள்ளார். போலீசார், மோசடிப் பேர்வழிகளை தேடி வருகின்றனர்.