சித்தராமையா முதல்வராக நீடிக்க கனகபுரா பிரதர்ஸ் ஆதரவு! வேறு சிலரும் பதவிக்கு ஆசைப்படுவதால் அதிரடி
சித்தராமையா முதல்வராக நீடிக்க கனகபுரா பிரதர்ஸ் ஆதரவு! வேறு சிலரும் பதவிக்கு ஆசைப்படுவதால் அதிரடி
ADDED : அக் 09, 2024 11:03 PM

பெங்களூரு : சித்தராமையாவே முதல்வராக நீடிக்க, 'கனகபு ரா பிரதர்ஸ்' என்று அழைக்கப்படும், துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளனர். வேறு சிலரும் பதவிக்கு ஆசைப்படுவதால், இந்த அதிரடி முடிவை எடுத்து உள்ளனர்.
கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முதல்வர் ஆக முயற்சி செய்தார். ராகுல் ஆதரவுடன் சித்தராமையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் என்ற பார்முலாவில் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் அதை பற்றி, இதுவரை எந்த தகவலும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிவகுமார் முதல்வர் பதவி மீதான ஆசையை வெளிப்படுத்துகிறார்.
'முடா' வழக்கில் சித்தராமையா பெயர் அடிபட்டதும், அவர் பதவி விலகுவார் என்ற பேச்சு அடிபட்டது.
உஷாரான சிவகுமார், டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, பதவிக்கு, 'துண்டு' போட்டார். ஆனால் சில நாட்களாக பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, முதல்வர் பதவியை பெற முயற்சிக்கிறார்.
டில்லி சென்று கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசினார். 'தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர், கர்நாடக முதல்வராக இருந்தது இல்லை. இம்முறை தலித் ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமரும், வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்' என்று கேட்டு கொண்டார்.
தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியிலும், சதீஷ் ஈடுபட்டார். இது சிவகுமாருக்கும், அவரது தம்பி சுரேஷுக்கும் வயிற்றில் புளியை கரைத்தது.
சிவா 'ஐஸ்'
இதையடுத்து, சதீஷை சுரேஷ் சந்தித்து பேசினார். பின் சுரேஷ் அளித்த பேட்டியில், ''சித்தராமையா எங்கள் தலைவர். அவரே ஐந்து ஆண்டுகளும் முதல்வர்,'' என்றார்.
''முடா வழக்கில் சித்தராமையா எந்த தவறும் செய்யவில்லை. அவருக்கு ஆதரவாக கடைசி வரை நான் இருப்பேன். முதல்வர் தான் எங்கள் தலைவர்,'' என்று, சிவகுமாரும் ஐஸ் வைத்தார். 'கனகபுரா பிரதர்ஸ்' மனமாற்றத்தில், அரசியல் கணக்குகளும் உள்ளது.
ஒருவேளை இப்போது சித்தராமையாவை மேலிடம் ராஜினாமா செய்ய சொல்லி, அவரும் பதவி விலகினால், அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கோபத்தை, காங்கிரஸ் மேலிடம் சந்திக்க நேரிடும்.
காங்கிரசை வெற்றி பெற வைப்பது அஹிந்தா சமூக ஓட்டுகள் தான். சித்தராமையா பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக உள்ளார். அவர் ராஜினாமா செய்தாலும், ஓட்டுகளை சிதறாமல் பாதுகாக்க, பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படலாம்.
அப்படி யாராவது முதல்வர் பதவிக்கு வந்து விட்டால், அவர்களை பதவியில் இருந்து இறக்குவது மிகவும் கடினம்.
தப்புக்கணக்கு
அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒருவேளை வெற்றி பெற்றால், இப்போது முதல்வராக இருப்பவரே நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தனது முதல்வர் பதவி கனவு தகர்ந்து போகும் என்றும், சிவகுமார் நினைக்கிறார்.
சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருந்தால், வேறு யாரும் இடையில் வந்து, முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அதன்பின் மேலிடத்திடம் சென்று, முதல்வர் பதவி கேட்கலாம் என்பது சிவகுமார், சுரேஷின் கணக்காக உள்ளது. அதற்கேற்ப, சித்தராமையாவும், 'இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனால் சித்தராமையாவே முதல்வராக நீடிக்க இருவரும், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால் சிவகுமாரின் கணக்கு தப்பாகி விடும்.
சிவகுமார்