ஆர்.எஸ்.எஸ்., இயக்க பாடலை பாடி பீதியை கிளப்பி விட்ட காங்., சிவகுமார்
ஆர்.எஸ்.எஸ்., இயக்க பாடலை பாடி பீதியை கிளப்பி விட்ட காங்., சிவகுமார்
ADDED : ஆக 23, 2025 01:21 AM

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்க பாடலை, து ணை முதல்வர் சிவகுமார் பாடினார். இதனால், பா.ஜ., உறுப்பினர்கள் உற்சாகமடைந்தனர். இதை அடுத்து, அவர் பா.ஜ.,வில் சேருவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதை மறுத்த சிவகுமார், 'நான் சாகும் வரை காங்கிரசில் தான் இருப்பேன்' என்றார்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சட்டசபையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக விவாதம் நடந்தது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளித்தபோது குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், 'ஆர்.சி.பி., அணி வீரர்களை வரவேற்க, துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்துக்கு சென்று, கன்னட கொடியை கையில் பிடித்தார்' என்று குற்றம் சாட்டினர்.
இதற்கு சிவகுமார் பதிலளிக்கையில், 'நான் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர். அதன் செயலரும், நானும் பால்ய காலத்து நண்பர்கள். பெங்களூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளேன். விமான நிலையத்துக்கு சென்று, கன்னட கொடியை கையில் ஏந்தினேன்; ஆர்.சி.பி., வீரர்களை பாராட்டினேன்; கோப்பைக்கு முத்தமும் கொடுத்தேன். என் பணியை நான் செய்தேன்.
'இத்தகைய சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளன. தேவையென்றால், எங்கெங்கு நடந்தது என்பதை பட்டியலிடுகிறேன்' என்றார்.
'நமஸ்தே சதா வத்சலே...' அப்போது பேசிய பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அசோக், 'இதற்கு முன், நீங்களும் ஆர்.எஸ்.எஸ்., உடை அணிந்ததாக தெரிவித்திருந்தீர்கள்' என்றார்.
அப்போது சிவகுமார், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் 'நமஸ்தே சதா வத்சலே...' என்ற பாடலின் இரண்டு வரிகளை பாடினார்.
இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மேஜையை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதே வேளையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பா.ஜ.,வின் சுனில் குமார் பேசுகையில், 'இந்த வரியை சபை குறிப்பில் இருந்து அகற்றக் கூடாது' என்றார். ஆர்.எஸ்.எஸ்., இயக்க பாடலை சிவகுமார் பாடியது, கட்சி தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர், பா.ஜ.,வில் சேருகிறாரா என்று விவா தங்கள் துவங்கின.
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடருக்கு நேற்று வந்த சிவகுமார் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடியதால், நான் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நான் யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சேரும் எண்ணம் இல்லை.
நான் உண்மையான காங்கிரஸ்காரன். நான் பிறந்தது முதல் காங்கிரசில் இருக்கிறேன். சாகும் வரை காங்கிரசில் இருப்பேன். என் வாழ்க்கை, ரத்தம் அனைத்திலும் காங்கிரஸ் தான் உள்ளது. இப்போது கட்சியை வழி நடத்தி வருகிறேன். பா.ஜ., - ம.ஜ.த., உட்பட ஒவ்வொரு கட்சி குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அது போன்று, ஆர்.எஸ்.எஸ்., குறித்தும் எனக்கு தெரியும்.
மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., தன் அமைப்பை எவ்வாறு அமைத்தது என்பது எனக்கு தெரியும். அனைத்து தாலுகா, மாவட்ட அளவிலான கல்வி மையங்களை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தன் வசப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க, அதிகளவில் பணத் தை செலவழிக்கிறது.
நல்ல குணம் அரசியல் ரீதியாக எங்களுக்கு கொள்கை வேறுபாடு இருக்கலாம். அரசியல்வாதியாக, என் அரசியலில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் தான், ஆர்.எஸ்.எஸ்., வரலாறை தெரி ந்து கொண்டேன்.
சில அமைப்புகளில் நல்ல குணங்களும் உள்ளன; அவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேரடியாகவும், தைரியமாகவும் பேசுவது நம் இயல்பு. மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.