ஒரு படம் எடுத்தேன்... ஒரே அக்கப்போர்! அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; கங்கனா கண்ணீர்
ஒரு படம் எடுத்தேன்... ஒரே அக்கப்போர்! அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; கங்கனா கண்ணீர்
ADDED : ஆக 31, 2024 06:54 AM

புதுடில்லி: தமது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கை வழங்கிவிட்டு தற்போது மிரட்டல் காரணமாக சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ., எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பகீர் புகார் எழுப்பி உள்ளார்.
பாலிவுட்
ஒரு படம் தான், அதற்கு இத்தனை அக்கப்போரா என்ற கேள்விதான் இப்போது பாலிவுட்டில் அதிகம் பேசப்படுகிறது. படத்தின் பெயர் எமர்ஜென்சி. முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது மக்கள் கேட்ட, அனுபவித்த வார்த்தை. இந்திரா கதாபாத்திரம்
அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார் பிரபல நடிகை கங்கனா ரனாவத். ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி பா.ஜ., தொகுதி எம்.பி.யும் இவர்தான். படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்துள்ளார். சம்பவங்கள்
இந்திராகாந்தியின் அரசியல் நடவடிக்கைகள், எமர்ஜென்சி அமலான போது நிகழ்ந்தவை, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது அரங்கேறிய சம்பவங்கள் இந்த படத்தில் காட்டப்பட்டு உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. படம் வரும் செப்டம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக கடந்த 14ம் தேதி டிரெய்லர் வெளியாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து உள்ளது.சான்றிதழ்
படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது, சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் படத்துக்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கங்கனா ரனாவத் தெளிவுபடுத்தி உள்ளார். தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.அச்சுறுத்தல்கள்
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கங்கனா கூறியிருப்பதாவது; எமர்ஜென்சி படத்துக்காக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. உள்ளதை சொல்ல வேண்டுமானால் எங்கள் படத்துக்கு முன்னரே தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை அதிகாரிகளுக்கு பல அச்சுறுத்தல்கள் வருவதால் அதன் எதிரொலியாக சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.மிகவும் வருத்தம்
இந்திரா கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்டக்கூடாது என்று எங்களுக்கு அழுத்தம் வருகிறது. படத்தில் என்ன காட்சி அமைப்புகள் இடம்பெற்று உள்ளன என்ற கேள்வியும் பலமாக எழுகிறது. என்னால் எதையும் நம்பமுடியாத தருணமாக உள்ளது. நாட்டில் தற்போது நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.