ஒரு வழியா பிரச்னை முடிஞ்சிருச்சு! விரைவில் படம் ரிலீஸ் ஆகும்; கங்கனா தந்த 'அப்டேட்'
ஒரு வழியா பிரச்னை முடிஞ்சிருச்சு! விரைவில் படம் ரிலீஸ் ஆகும்; கங்கனா தந்த 'அப்டேட்'
ADDED : அக் 18, 2024 08:25 AM

புதுடில்லி: எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நடிகை கங்கனா ரனாவத் அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து, பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், 'எமர்ஜென்சி' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என தெரிவித்து இருந்தார். வேறு வழியின்றி ஏற்றுக் கொண்ட நடிகை கங்கனாவும் அதை ஏற்றுக் கொண்டார். சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில், எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது என கங்கனா தெரிவித்து உள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.