சோனியாவை வம்புக்கு இழுத்த கங்கனா: காங்கிரஸ் கடும் கோபம்
சோனியாவை வம்புக்கு இழுத்த கங்கனா: காங்கிரஸ் கடும் கோபம்
UPDATED : செப் 23, 2024 10:32 PM
ADDED : செப் 23, 2024 06:07 PM

புதுடில்லி: '' ஹிமாச்சல பிரதேச அரசு, கடன் வாங்கி காங்கிரஸ் எம்.பி., சோனியாவுக்கு கொடுக்கிறது,'' என பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ஆதாரங்களை அவர் வெளியிடா அவதூறு வழக்கு தொடர்வோம் என எச்சரித்து உள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவரது சில பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பா.ஜ., மேலிடம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மணாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கங்கனா ரணாவத் பேசியதாவது: ஹமாச்சல பிரதேச அரசு கடன் வாங்கி சோனியாவிடம் அளித்து உள்ளது. இதனால் மாநில அரசின் கஜானா காலியாக உள்ளது. மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி அளித்தால் அது முதல்வர் நிவாரண நிதிக்கு செல்கிறது. ஆனால், அந்த நிதி அங்கிருந்து சோனியா நிவாரண நிதிக்கு செல்வது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
கண்டனம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விக்கிரமாதித்யா கூறியதாவது: மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி சோனியாவிடம் கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா என அவருக்கு நான் சவால் விடுகிறேன். இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.