69 பேருக்கு கன்னட ராஜ்யோத்சவா விருது: வீடுதோறும் கொடியேற்ற முதல்வர் அழைப்பு
69 பேருக்கு கன்னட ராஜ்யோத்சவா விருது: வீடுதோறும் கொடியேற்ற முதல்வர் அழைப்பு
ADDED : செப் 20, 2024 05:52 AM

பெங்களூரு: ''கர்நாடக பொன் விழாவை, கன்னட மக்கள் உற்சவம் என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறை 69 பேருக்கு, ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட உள்ளது. அன்றைய தினம், வீடுதோறும் கன்னட கொடி ஏற்றும்படி அழைப்பு விடுக்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு மாகாணம், கர்நாடகா என்று பெயர் உருவான பொன் விழா, கடந்தாண்டு துவங்கியது. ஆண்டு முழுதும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆன்லைன்
இதன், நிறைவு விழா நடத்துவது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், முதல்வர் கூறியதாவது:
கர்நாடக பொன் விழாவை, கன்னட மக்கள் உற்சவம் என்று கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறை 69 பேருக்கு, ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு, வரும் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தலைமையில், விருது தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் பொன் விழா நிறைவு விழா கொண்டாடப்படும்.
கன்னட ரதம், ஹம்பியில் இருந்து ஆரம்பித்து, 28 மாவட்டங்களை கடந்துள்ளது. இதன் நிறைவு விழா, உத்தர கன்னடா மாவட்டம், சித்தாபுராவில் நடத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொன் விழாவின் நிறைவு விழா, பெங்களூரு விதான் சவுதாவின் பெரிய படிகட்டுகள் மீது நடத்தப்படும். அதே விழாவில், ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும். 50 சாதனை பெண்கள் தொடர்பாக, 100 பக்கங்கள் கொண்ட 50 நுால்கள், கர்நாடக சாகித்ய அகாடமி மூலம் வெளியிடப்படும்.
வெண்கல சிலை
விதான் சவுதா வளாகத்தில், 25 அடி உயர புவனேஸ்வரி தேவி வெண்கல சிலை அமைக்கும் பணி நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி நிறுவப்படும். அன்றைய தினம் மாநிலத்தின் நான்கு திசைகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அன்றைய தினம் வீடுதோறும் கன்னட கொடி ஏற்றும்படி அழைப்பு விடுக்கப்படும். கர்நாடகாவின் கலை, இலக்கியம், விவசாயம், தோட்டக்கலை, தொழில் ஆகிய ஐந்து விஷயங்களை முன்னிலைப்படுத்தி, 100 புத்தகங்கள் வெளியிடப்படும்.
கன்னட கவிஞர்களின் தத்துவங்கள், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பொறிக்கப்படும். அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் இம்முறை கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொரகா மொழி போன்று, சிறுபான்மை மொழிகள் வளர்ச்சிக்கு வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.