என்ன அங்க கூப்டாக, இங்க கூப்டாக! கோவை சரளா ஸ்டைலில் சீமான் லகலக!
என்ன அங்க கூப்டாக, இங்க கூப்டாக! கோவை சரளா ஸ்டைலில் சீமான் லகலக!
ADDED : செப் 16, 2024 03:46 PM

காரைக்குடி: என்னை சின்னமனூரில் கூப்பிட்டாங்க, மதுரையில் கூப்பிட்டாங்க என்று சினிமா டயலாக் பேசி 2026ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி சேருவேனா, இல்லையா என்று சீமான் நையாண்டி செய்துள்ளார்.
ஸ்டைல்
கழுத்து நரம்பு புடைக்க பேசுவது, கேள்வி கேட்பவர்களிடம் எதிர்கேள்வி கேட்டு மடக்குவது, மேடையில் ஆவேசம் பிளஸ் ஜனரஞ்சகமாக பேசுவது என்பது நாம் தமிழர் சீமானின் ஸ்டைல். அவர் செல்லும் இடங்களில் அவரது பேச்சைக் கவனிக்கவும், நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டியை கேட்கவும் தனிக்கூட்டம் இருக்கிறது.
நையாண்டி
அதில் லேட்டஸ்ட்டாக காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி தான் வைரல். எந்த கேள்வி என்றாலும் கலக்கல் பதில் தரும் அவர் இம்முறையும் நக்கல், நையாண்டி என நவரசங்களுடன் பேசி இருக்கிறார்.காரைக்குடியில் அவர் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறியதாவது;
என்ன செய்கின்றனர்?
மீனவர்கள் எல்லை தாண்டி வருகின்றனர் என்பது பிரச்னையாக பார்க்கப்படுவது இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதாலேயே தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். 39 எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர், 880 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மத்திய,மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
யாருடன் கூட்டணி?
'தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாங்கள் பெற்ற ஓட்டுக்களை காங்கிரசால் பெற முடியுமா? தேர்தலுக்கு இன்னமும் 2 ஆண்டுகள் உள்ளதால் பின்னர் அதை பற்றி பேசலாம்' என்றார் சீமான்.
அப்போது நிருபர் ஒருவர், 2026ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்கு சீமான் பதில் அளித்ததாவது;
தனித்தே போட்டி
2026ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். அதையே திரும்ப, திரும்ப கேட்கக்கூடாது. என்னுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை என்னோடு சேர விரும்புவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இவருடன் கூட்டணி சேர போகிறேன், அவருடன் கூட்டணி வைக்க போகிறேன் என்று சொல்பவன் அல்ல.
கோவை சரளா டயலாக்
என்னை சின்னமனூரில் கேட்டாக, மதுரையில் கூப்டாக என்று நடிகை கோவை சரளா போல பேசிக்கொண்டு இருக்க நான் தயாராக இல்லை. என் பாதை தனி, பயணம் தனி, எனக்கு ஒரு கனவு இருக்கு, பூமியின் சொர்க்கமாக என் நாட்டை நான் படைக்க ஆசைப்படுகிறேன்.
மக்களை நேகிக்கிறேன்
அதற்காக இவருடன் கூட்டணி, அவருடன் கூட்டணி என்று சேரப்போவது இல்லை. என்னோடு சேர்ந்தால் நாடும், மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று நினைத்தால் வரலாம், அது யாராக இருந்தாலும் சரி. இல்லை என்றால் ஆளை விடுங்க. நான் என் மக்களை முழுமையாக நேசிக்கிறேன், நம்புகிறேன் என்று கூறினார்.