ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு
ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு சென்றதால் கார்கே கோபம்! சிவகுமாருக்கு கண்டிப்பு
ADDED : ஜன 27, 2024 12:43 AM

பெங்களூரு: ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வுக்கு திரும்பிச் சென்றதால், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீது, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோபம் அடைந்துள்ளார். மாற்றுக்கட்சியில் இருந்து வருபவரின் பின்னணி என்ன, நம் கட்சிக்கு அவர் ஒத்துவருவாரா என்பதை பார்த்து, கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
கர்நாடக பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜெகதீஷ் ஷெட்டர். ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில் இருந்து, ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, அவருக்கு பா.ஜ., மேலிடம், 'சீட்' மறுத்தது.
இதனால் காங்கிரசில் இணைந்து, அதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் அவரை காங்கிரஸ் நியமன எம்.எல்.சி., ஆக்கியது.
ஆனால் நேற்று முன்தினம் திடீரென காங்கிரசில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். இது கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவசரம் வேண்டாம்
குறிப்பாக, பா.ஜ.,வில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டரை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, அவருக்கு 'சீட்' கொடுத்த, துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சியில் உறைந்தார். தன்னை காங்கிரஸ் மரியாதையுடன் நடத்தியது என்றே ஜெகதீஷ் ஷெட்டர் கூறி வந்தார். ஆனால் அவர் ஏன் பா.ஜ.,வுக்குச் சென்றார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்றார். இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கேயும், சிவகுமாரும் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ.,வுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் சென்றது குறித்து, சிவகுமார் மீது கார்கே கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சங் பரிவார் பின்னணியில் இருந்து வந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். அவரை அவசரப்பட்டு கட்சியில் சேர்த்தது ஏன்? அவர் நம் கட்சிக்கு ஒத்து வருவாரா என்பதை பார்த்து சேர்த்து இருக்க வேண்டும்.
இனி மாற்றுக்கட்சிகளில் இருந்து வருவோரை, அவசரப்பட்டு கட்சியில் சேர்க்காமல், அவரது பின்னணி என்ன? அவரது பலம் என்ன? நம் கட்சியுடன் ஒத்து வருவாரா? கட்சியுடன் கடைசி வரை பயணம் செய்வாரா என்பதை தீவிரமாக பரீசிலித்து கட்சியில் சேர்க்க வேண்டும் என, கார்கே கண்டிப்புடன் கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

