ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்றசூழல் கர்நாடகாவும், தமிழகமும் முன்னணி
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்றசூழல் கர்நாடகாவும், தமிழகமும் முன்னணி
ADDED : ஜன 18, 2024 04:59 AM
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தருவதில் கர்நாடகாவும் தமிழகமும் முன்னணியில் இருக்கின்றன.
நாடு முழுதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழல் குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை ஆய்வு நடத்தியது. இதில் அனைத்து மாநிலங்களின் சூழலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
நிதியுதவி, நிறுவனத்துக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஐந்து வகைகளாக பிரித்துள்ளது. இந்த பட்டியலில் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஐந்து பிரிவும், ஒரு கோடிக்கு குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை ஐந்து பிரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன. முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கித் தரும் மாநிலங்கள் பெஸ்ட் பெர்பார்மர் என்ற முதல் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பிரிவின் முதலிடத்தில் குஜராத் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
டாப் பெர்பார்மர் என்ற இரண்டாவது பிரிவில் மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களும்; லீடர் என்ற மூன்றாவது பிரிவில் ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களும் உள்ளன.
அஸ்பெரிங் லீடர் என்ற பிரிவில் பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடைசிப் பிரிவில் சத்தீஸ்கர், டில்லி, ஜம்மு - காஷ்மீர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஒருகோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் ஹிமாச்சல் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அருணாச்சல பிரதேசம், மேகாலயா, கோவா, மணிப்பூர், திரிபுரா, அந்தமான் - நிகோபர் தீவுகள், நாகாலாந்து, சண்டிகர் உள்ளிட்ட சிறு மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன- நமது நிருபர் -.