கோவில் பணத்தில் முறைகேடு நடக்காது கர்நாடகா அர்ச்சகர் சங்கம் விளக்கம்
கோவில் பணத்தில் முறைகேடு நடக்காது கர்நாடகா அர்ச்சகர் சங்கம் விளக்கம்
ADDED : பிப் 26, 2024 07:12 AM
பெங்களூரு: ''கோவில்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படாது,'' என்று, கர்நாடகா அர்ச்சகர் சங்கம் விளக்கம் அளித்து உள்ளது.
கர்நாடகா சட்டசபையில், கர்நாடகா ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா - 2024 நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள, கோவில்களிடம் இருந்து 10 சதவீத தொகையும்; 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள, கோவில்களில் இருந்து 5 சதவீத தொகையும், வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கோவில் பணத்தை கொள்ளையடித்து, மசூதிகள், தேவாலயங்கள் வளர்ச்சிக்கு கொடுக்க பார்ப்பதாக, பா.ஜ., கூறியது. ஆனால் அரசு மறுத்து உள்ளது. அதிக வருமானம் வரும் கோவில் பணத்தை வைத்து, குறைந்த வருமானம் வரும் கோவிலில், வளர்ச்சி பணிகள் செய்ய உள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறி இருந்தார்.
இந்நிலையில் கர்நாடகா அர்ச்சகர் சங்கத்தினர், பெங்களூரில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
மாநிலத்தில் உள்ள 'ஏ' கிரேடு கோவில்கள் பற்றி, நிறைய அவதுாறு பரப்பப்படுகிறது.
காங்கிரஸ் அரசு கோவில்கள் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. 'ஏ' கிரேடு கோவில்கள் மூலம், அதிக வருமானம் கிடைப்பதை சகித்து கொள்ள முடியாமல், பா.ஜ., தலைவர்கள் அரசு மீது பொய் குற்றச்சாட்டு சொல்கின்றனர். தேவாலயம், மசூதிகளுக்கு, கோவில் பணம் செல்வதாக, அவதுாறு பரப்புகின்றனர்.
கோவில்களை அரசியலுக்கு இழுக்க கூடாது. ஒவ்வொரு பா.ஜ.,வினர் வீட்டிற்கும் சென்று, கர்நாடகா ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதாவுக்கு எதிராக, போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்வோம். கோவில் பணம் தவறாக பயன்படுத்தப்படாது. எங்கள் கோரிக்கைகளை, அறநிலைய அமைச்சர் ராமலிங்கரெட்டி நிறைவேற்றி வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

