கர்நாடக பா.ஜ., பாழாகிவிட்டது: 'மாஜி' ஈஸ்வரப்பா கண்டுபிடிப்பு
கர்நாடக பா.ஜ., பாழாகிவிட்டது: 'மாஜி' ஈஸ்வரப்பா கண்டுபிடிப்பு
ADDED : பிப் 03, 2025 04:59 AM

விஜயபுரா; ''என் வாழ்நாளை கழித்த கர்நாடக பா.ஜ., பாழாகிவிட்டது. அக்கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என்பது போன்று உள்ளது,'' என முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில அரசியல் திசைமாறி போய்விட்டது. பா.ஜ., - காங்கிரஸ் - ம.ஜ.த., அனைத்து கட்சிகளும் அழிந்துவிட்டன. அந்தந்த கட்சிகளின் மத்திய தலைவர்கள், எதுவும் செய்யவில்லை.
என் வாழ்நாள் முழுதையும் கழித்த பா.ஜ.,வின் கதை பாழாகிவிட்டது. அக்கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என்பது போன்று உள்ளது.
ஷிவமொகா மாவட்டம், ஷிகாரிபுராவில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்தாததாலும்; எங்களின் பிச்சையாலும் விஜயேந்திரா வெற்றி பெற்றார் என துணை முதல்வர் சிவகுமார் கூறுகிறார்.
அதுபோன்று, வருணாவில் நான் போட்டியிட்டிருந்தால், சித்தராமையா தோல்வி அடைந்திருப்பார் என விஜயேந்திரா கூறுகிறார். இது என்ன போட்டியா.
காங்கிரசும் விதிவிலக்கல்ல. மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வார்த்தைக்கு, கட்சியில் மதிப்பில்லை. கும்பமேளா குறித்து அவர் பேசியது வருத்தம் அளிக்கிறது. 'கும்ப மேளாவில் குளித்தால் வயிறு நிரம்பிவிடுமா' என கார்கே கேட்கிறார்.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, 80 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால், 2 வயது சிறுவன் போன்று ஆடுகிறார். ஹிந்து மதம் குறித்த சிந்தனை இவருக்கு ஏன். முஸ்லிம்களின் ஓட்டுக்காக கார்கே, இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல.
காங்கிரசில் நமது புண்ணிய தலத்தை பற்றி, பசுக்கள், ஆறுகள் குறித்தும் அலட்சியமாக பேசும் தலைவர்கள் பலர் உள்ளனர். மோடி, அமித் ஷா குறித்து விமர்சிக்க காங்கிரசார் யார். முதலில் கார்கே, தன் கட்சிக்காரர்களின் வாயை மூடும்படி சொல்ல வேண்டும்.
பசுவின் மடியை வெட்டும் போதும்; கருவுற்ற பசுவை வெட்டும் போதும் கார்கே பேசவில்லை. பசு மீது கை வைத்தவர்களின் கையை வெட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

