எத்னால் மீது நடவடிக்கை எடுக்காத மேலிடம்; கர்நாடக பா.ஜ., தலைவர்கள் அதிருப்தி
எத்னால் மீது நடவடிக்கை எடுக்காத மேலிடம்; கர்நாடக பா.ஜ., தலைவர்கள் அதிருப்தி
ADDED : நவ 29, 2024 12:11 AM

கட்சி தலைவர்களை விமர்சித்து, தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது, நடவடிக்கை எடுக்காமல் மவுனம் வகிக்கும் பா.ஜ., மேலிடத்தின் மீது, மாநில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், ம.ஜ.த.,வில் இருந்து வந்தவர். இவரை கட்சிக்கு அழைத்து வந்தது, முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவரையே, எத்னால் எதிரி போன்று நடத்துகிறார். இவரது மகன்களை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்.
கடும் வார்த்தைகள்
கடந்த 2023 சட்டசபை தேர்தல் முடிந்த பின், தனக்கு எதிர்க்கட்சி தலைவர் அல்லது மாநில பா.ஜ., தலைவர் பதவி கிடைக்கும் என, மிகவும் ஆவலாக காத்திருந்தார். ஆனால் அசோக், எதிர்க்கட்சி தலைவராகவும், விஜயேந்திரா மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த எத்னால், அன்று முதல் வார்த்தைகளை தீயில் தோய்த்து வீசி எறிகிறார்.
சட்டசபையிலும் கூட, சொந்த கட்சியினரை வசைபாடி, அசோக், விஜயேந்திராவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். 'காங்கிரஸ் அரசை கவிழ்க்க, எங்கள் கட்சியினர் 1,000 கோடி ரூபாய் தயாராக வைத்துள்ளனர்' என, கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்மையில் நடந்த மூன்று சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை. கட்சியில் உட்பூசல் இருப்பதை பகிரங்கப்படுத்தினார்.
தனி பாதயாத்திரை
வக்பு வாரிய நோட்டீசை கண்டித்து, மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ., மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது. இதில் பங்கேற்காத எத்னால், தற்போது சில தலைவர்களை உடன் சேர்த்து கொண்டு, தனியாக பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
இவ்வளவு செய்தும், எத்னால் மீது நடவடிக்கை எடுக்காமல், பா.ஜ., மேலிடம் மவுனமாக இருப்பது தலைவர்களுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக பா.ஜ.,வை, தென் மாநிலங்களின் தலைமை வாசல் என்கின்றனர். ஆனால் உட்கட்சி பூசல், கருத்து வேறுபாட்டால் கட்சிக்கு இன்று இந்த நிலை வந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
கடிதங்கள்
பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் துவங்கிய போதே, இதை சரி செய்யும்படி மேலிடத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். சமீபத்தில் நடக்கும் நிலவரங்கள் குறித்தும், கடிதம் எழுதினேன். ஆனால் இரண்டு கடிதங்களுக்கும், மேலிடத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
வக்பு வாரிய நோட்டீசுக்கு எதிராக, பசனகவுடா பாட்டீல் எத்னால் நடத்தி வரும் போராட்டத்தை விட, கட்சி தலைவர்களின் உட்பூசலே, அதிகம் பரபரப்பாக பேசப்படுகிறது. இது சரியல்ல.
கட்சி விஷயங்களை வீதியில் நின்று பேசுவது, தனியாக கூட்டம் நடத்துவது தவறு. யார், யாருக்கு ஆதரவாக பேசுகின்றனர் என்பது முக்கியம் அல்ல. ஒழுங்கு மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களை பெரிய தலைவர்கள் என நினைத்து கொண்ட பலர், எங்கள் கட்சியில் உள்ளனர். ஓரிருவர் மீது நடவடிக்கை எடுத்தால், மற்றவர்கள் வாய் திறக்க தயங்குவர். கர்நாடக பா.ஜ.,வின் நிலையை கண்டு, என் மனம் வருந்துகிறது.
நான் எந்த கோஷ்டிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை. கட்சி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே, என் ஒரே குறிக்கோள். நான் மாநில தலைவராக இருந்த போதும், இதை விட வலுவான எதிரி கோஷ்டிகள் இருந்தன. எல்லை மீறி பேசக்கூடாது என, நான் எச்சரித்தேன். எனவே யாரும் ஒழுங்கு மீறி நடக்கவில்லை.
கோஷ்டிகள்
நான் மாநில தலைவராக இருந்த போது, எடியூரப்பா, அனந்த்குமார் என, இரண்டு கோஷ்டிகள் இருந்தன. இவர்கள் எப்போதும், வீதிக்கு வந்து விமர்சித்தது இல்லை.
என்னை போன்ற மூத்த தலைவர்கள் தலையிட்டு, இரண்டு கோஷ்டிகளையும் ஒன்று சேர்த்து, ஆலோசனை கூட்டம் நடத்த நினைத்தோம். ஆனால் அவர் (எத்னால்) எப்போது, வீதிக்கு வந்து வாய்க்கு வந்தபடி பேசினாரோ, இவர்களை ஒன்று சேர்ப்பது நம்மால் முடியாத வேலை என, தெரிந்தது. சூழ்நிலை எங்கள் கை மீறி சென்றுவிட்டது.
மஹாராஷ்டிராவில் அரசு அமைத்த பின்னராவது, கட்சி மேலிடம் கர்நாடகா மீது பார்வையை திருப்ப வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும், தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.,வின் உட்பூசலே, காங்கிரசுக்கு அஸ்திரமாக உள்ளது. நான் கட்சியை சுத்தம் செய்தே தீருவேன்.
தகுதியில்லை
வீதியில் நின்று பேசுவோர், எங்கள் கட்சியில் இருக்க தகுதியே இல்லை. பா.ஜ.,வின் இரண்டு கோஷ்டிகள், வீதியில் இறங்குவதற்கு பதில், டில்லிக்கு விமானம் ஏறி செல்லுங்கள். டில்லியில் எங்களுக்கு அற்புதமான தலைவர்கள் உள்ளனர். பிரச்னையை சரி செய்து கொள்ளுங்கள்.
இடைத்தேர்தலில் எங்கள் தோல்விக்கு, உட்பூசலே காரணம் என்பதை, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்த ஒன்றரை ஆண்டில், நாங்கள் 'பவர்புல் எதிர்க்கட்சி' என்பதை, மக்களுக்கு உணர்த்தவில்லை. காங்கிரசார் பல அஸ்திரங்களை, தங்கத்தட்டில் வைத்து எங்களிடம் கொடுத்தனர். ஆனால் அவற்றை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரை போலவே, இன்னும் பல மாநில தலைவர்களும், மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர்.
சதானந்த கவுடா வாயை மூடிகொண்டு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அவரது வண்டவாளத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். எடியூரப்பாவை பற்றி, சதானந்த கவுடா தரக் குறைவாக பேசவில்லை என, சத்தியம் செய் யட்டும். எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி, என்னை விட மோசமாக என்னென்ன பேசினார் என்பதை, வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். வக்பு வாரியத்துக்கு எதிராக பேசினால், இவருக்கு என்ன பிரச்னை.
- பசனகவுடா பாட்டீல் எத்னால்
எம்.எல்.ஏ., - பா.ஜ.,
- நமது நிருபர் -