போலி சாதனை சான்றிதழ் கிண்டலில் சிக்கிய கர்நாடக முதல்வர்
போலி சாதனை சான்றிதழ் கிண்டலில் சிக்கிய கர்நாடக முதல்வர்
ADDED : அக் 18, 2025 03:47 AM

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்திற்கு, உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் சான்றிதழை வெளியிட்ட நிலையில், அது போலி என தெரியவந்ததால் அந்த பதிவை நீக்கினார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மகளிருக்கு இலவச பஸ் பயணம், 'சக்தி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப் படுகிறது.
இந்த திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து அக்டோபர் வரை பெண்கள், 564 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதை பிரிட்டனில் உள்ள, 'லண்டன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், அதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை வெளியிட்டார். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த சமூக வலைதள பயனர்கள், அது போலி என கண்டறிந்தனர். முதல்வர் சித்தராமையாவை சகட்டுமேனிக்கு கிண்டலடித்தனர்.
'சான்றிதழ் வழங்கிய அமைப்பு பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் ஜூலை 2025ல் மூடப்பட்டதாக, பிரிட்டன் அரசின் கம்பெனிகள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதன் பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழுக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை' என குறிப்பிட்டனர்.
'எக்ஸ்' சமூக வலைதளத்தின் உண்மை சரிபார்ப்பு குழுவும் இதை உறுதிப்படுத்தியது. இதனால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த உலக சாதனை சான்றிதழ் பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கினார்.