கர்நாடக காங்., அமைச்சர்கள் மீது கார்கே காட்டம்!: சாதனை அறிக்கை அளிப்பதில் அலட்சியம் என சாடல்
கர்நாடக காங்., அமைச்சர்கள் மீது கார்கே காட்டம்!: சாதனை அறிக்கை அளிப்பதில் அலட்சியம் என சாடல்
ADDED : டிச 01, 2024 11:24 PM

பெங்களூரு: தங்கள் துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்து, அறிக்கை கேட்டு ஆறு மாதங்களாகியும் தராத கர்நாடக அமைச்சர்கள் மீது, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோபம் அடைந்துள்ளார். 'தலைவரின் உத்தரவுக்கே மதிப்பில்லையா' என, காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பொதுவாக அரசுக்கு ஓராண்டு நிறைவடைந்த பின், அமைச்சர்களின் செயல் திறனை, மேலிடம் ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, காங்கிரஸ் அரசு ஓராண்டை நிறைவு செய்த பின், முதல்வர் சித்தராமையா அமைச்சர்களின் செயல் திறனை அளவிட, கட்சி மேலிடம் முடிவு செய்தது.
6 மாதங்கள்
துறை வாரியாக செய்துள்ள சாதனைகள், செய்துள்ள பணிகள், கட்சியை பலப்படுத்துவதில், அவர்களின் பங்களிப்பு குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டிருந்தார். ஆனால், உத்தரவிட்டு ஆறு மாதமாகியும், அமைச்சர்களிடம் இருந்து அறிக்கை வரவில்லை. சிலர் மட்டுமே அறிக்கை அளித்தனர்.
அதேபோன்று, அவரவர் தொகுதிகளில் பிளாக் அளவில் காங்கிரஸ் அலுவலகம் திறக்க வேண்டும். மாநிலம் முழுதும் 100 பிளாக் அலுவலகங்கள் திறக்க வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்கு முன், கார்கே உத்தரவிட்டிருந்தார். அதையும் அமைச்சர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இது மல்லிகார்ஜுன கார்கேவை கோபப்படுத்தியது.
பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு, 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இம்மாதம் 28ம் தேதி, பெலகாவியில் நுாற்றாண்டு கொண்டாட்டம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் மேலிட தலைவர்கள் ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே வாயிலாக, 100 பிளாக் அலுவலகங்களை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல அமைச்சர்கள், கட்சி அலுவலகம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை.
கடும் கோபம்
டில்லியில் சமீபத்தில், மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உட்பட சில முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, கர்நாடக அமைச்சர்கள் சாதனை அறிக்கையை அளிக்காதது, கட்சி அலுவலகம் கட்டாதது குறித்து, கார்கே கடுங்கோபம் அடைந்தார். கட்சி மேலிடம் அளித்த பொறுப்பை செய்யாத அமைச்சர்களை கண்டித்தார்.
உடனடியாக அமைச்சர்களின் சாதனை அறிக்கையை பெற்றுத்தர வேண்டும், கட்சி அலுவலகம் திறக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடும்படி, சுர்ஜேவாலாவுக்கு கார்கே உத்தரவிட்டார். இதன்படி சுர்ஜேவாலே, அமைச்சர்களை கண்டித்து, அவரவர் சாதனை அறிக்கையை அளிக்க வேண்டும். பிளாக் காங்., அலுவலகம் கட்டியது குறித்து, தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார்.
மேலிடம் சாட்டையை சுழற்றிய பின், விழித்து கொண்ட அமைச்சர்கள், தங்களின் உதவியாளர்கள் மூலம் இரவோடு, இரவாக அவரவர் துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்து அறிக்கை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். கட்சி அலுவலகங்கள் திறக்க அவசர, அவசரமாக ஏற்பாடு செய்கின்றனர்.
நல்ல பெயர்
பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். சரியாக பணியாற்றாதவர்கள், சர்ச்சைக்கு ஆளான அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மேலிடம் விரும்புவதாக, தகவல் வெளியானதால் அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது. பதவியை தக்க வைத்து கொள்ள என்ன செய்யலாம் என, ஆலோசிக்கின்றனர். மேலிடத்திடம் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கின்றனர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சராக, துறை அமைச்சராக, தாங்கள் செய்துள்ள சாதனைகள், லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், அண்டை மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், கட்சிக்காக தாங்கள் அளித்துள்ள பங்களிப்புகளை, மிகையாக காட்டி அறிக்கை தயாரிக்கின்றனர். இதன் மூலம் அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இவர்களின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.