போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
போலி வக்கீல்கள் அதிகரிப்பு; கர்நாடக கவுன்சில் எச்சரிக்கை
ADDED : ஜூலை 30, 2025 03:02 AM

பெங்களூரு : 'கர்நாடகாவில், போலி வக்கீல்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் மீது, சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில வக்கீல்கள் கவுன்சில் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, வக்கீல்கள் கவுன்சில் வெளியிட்ட அறிக்கை:
போலி வக்கீல்கள் தொந்தரவால், வக்கீல் சமுதாயத்துக்கு களங்கம் ஏற்படுகிறது. மாநில வக்கீல்கள் கவுன்சிலுக்கு, தவறான தகவல் தெரிவித்து, போலியான ஆவணங்கள் கொடுத்து, வக்கீலாக பதிவு செய்து கொண்டவர்கள், தங்களின் தவறை ஒப்புக்கொண்டு, வக்கீல்களுக்கான லைசென்சை தி ருப்பி ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் , கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளி மாநிலங்களில் எல்.எல்.பி., படித்ததாக கூறி, கர்நாடகாவில் வக்கீல் தொழில் செய்ய அனுமதி கோரி, மாநில வக்கீல்கள் கவுன்சிலுக்கு வரும் பலருக்கு, தாங்கள் படித்த கல்லுாரி அல்லது பல்கலைக்கழக முகவரியே தெரியவில்லை. கடந்த ஐந்து மாதங்களில், போலியான ஆவணங் களுடன் வந்த 300 முதல் 400 பேர், திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவர்கள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிங்களின் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் எல்.எல்.பி., படித்ததாக போலியான மதிப்பெண் பட்டியல் தயாரித்து, கர்நாடகாவில் வக்கீல் பணியை துவங்க அனுமதி கோரினர்.
இதற்கு முன் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து, லைசென்ஸ் பெற்றவர்களை கண்டு பிடிக்க, வக்கீல்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருந்த சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை அறிய அவர்கள் படித்த கல்லுாரி, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்.
ஒரு வேளை போலியாக இருந்தால், லைசென்சை திருப்பி அளிக்க, ஆகஸ்ட் 30 வரை அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் திருப்பித் தராவிட்டால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

