பெலகாவி குளிர்கால கூட்டத்துக்கு ஒபாமாவை அழைக்க கர்நாடகா முடிவு
பெலகாவி குளிர்கால கூட்டத்துக்கு ஒபாமாவை அழைக்க கர்நாடகா முடிவு
ADDED : அக் 24, 2024 12:21 AM

பெங்களூரு : ''பெலகாவியில் வரும் டிசம்பரில் நடக்கும், சட்டசபை குளிர்கால கூட்டத்துக்கு, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்க அரசு ஆலோசிக்கிறது,'' என, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாடு நடந்து நுாற்றாண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடுவது குறித்து, திட்டம் தயாரிக்க மாநில அரசு, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம், பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று நடந்தது. அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் பேசியதாவது:
மகாத்மா காந்தி தலைமையில், பெலகாவியில் 1924ல் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இம்மாநாடு நடந்து 100 ஆண்டு நிறைவடைகிறது. இதை அர்த்தமுள்ளதாக கொண்டாட, அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, 2024 - 25ன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
'காந்தி பாரத்' பெயரில், ஆண்டு முழுதும் மாநிலத்தில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வரும் டிசம்பரில் பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில், சட்டசபை குளிர்க்கால கூட்டம் நடக்கும்.
இக்கூட்டத்துக்கு, காந்தியை, உலக தலைவர் என, கொண்டாடிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு அழைப்பு விடுப்பது குறித்து ஆலோசிக்கிறோம். அவருக்கு கடிதம் எழுதி, அழைப்பு விடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.