ஆர்எஸ்எஸ் பாடலை பாடி சர்ச்சையில் சிக்கிய டி.கே. சிவகுமார்: மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு
ஆர்எஸ்எஸ் பாடலை பாடி சர்ச்சையில் சிக்கிய டி.கே. சிவகுமார்: மன்னிப்பு கேட்பதாக அறிவிப்பு
ADDED : ஆக 26, 2025 01:56 PM

பெங்களூரு: சட்டசபையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்பதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி உள்ளார்.
கடந்த ஜூன் 4ம் தேதி கர்நாடகா சட்டசபையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் கூட்ட நெரிசல் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அவையில் பேசிய துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடினார். இணையத்தில் அவரது பாடல் பேசு பொருளானது.
அவரின் இந்த செயல் காங்கிரசுக்குள்ளும், இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன் என்று டி.கே. சிவகுமார் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அவரது விளக்கத்தை காங்கிரஸ் மேலிடம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
இந் நிலையில், தனது செய்கை காங்கிரசுக்கும், இண்டி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் வருத்தத்தை உண்டு பண்ணி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறி உள்ளார்.
பெங்களூருவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
ஆ ர்எஸ்எஸ்சை புகழ்வது எனது நோக்கம் அல்ல. 1980ல் நான் காங்கிரசில் பயணத்தை தொடங்கினேன். பல அரசியல் கட்சிகளின் வரலாற்றை படித்துள்ளேன். பாஜவால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவன்.
எனது செயல் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் இறுதி மூச்சுவரை நான் காங்கிரசில் தான் இருப்பேன். காங்கிரஸ் தான் எனது கடவுள். காங்கிரஸ்காரனாக பிறந்து, காங்கிரஸ்காரனாகவே இறப்பேன்.
இவ்வாறு டி.கே. சிவகுமார் பேட்டி அளித்தார்.

