இரட்டை வாக்குப்பதிவு குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகள் தர வேண்டும்; ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இரட்டை வாக்குப்பதிவு குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகள் தர வேண்டும்; ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ADDED : ஆக 10, 2025 08:20 PM

பெங்களூரு; இரட்டை வாக்குப்பதிவு என்று கூறிய குற்றச்சாட்டுக்கான உரிய தரவுகளை தருமாறு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 7ம் தேதி டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சந்திப்பின் போது, கர்நாடகாவில் (மகாதேவபுரா சட்டசபை தொகுதியில்) பெண் வாக்காளர் ஷகுன் ராணி என்பவர் இருமுறை வாக்களித்தார் என்று கூறி சில ஆவணங்களை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டினார்.
இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கர்நாடக முதன்மை தேர்தல் அதிகாரி தரப்பில், போலி வாக்குப்பதிவு என்பதற்கான உரிய ஆவணங்களை தருமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
உங்கள் (ராகுலின்) செய்தியாளர் சந்திப்பில், காட்டப்பட்ட ஆவணங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூறியுள்ளீர்கள். தேர்தல் அதிகாரி அளித்த பதிவுகளின்படி, ஷகுன் ராணி என்ற வாக்காளர் இரண்டு முறை வாக்களித்துள்ளார் என்றும் நீங்கள் கூறி உள்ளீர்கள்.
ஆனால் ஷகுன் ராணி அந்த குற்றச்சாட்டை மறுத்து, தான் ஒரு முறை மட்டுமே ஓட்டு போட்டதாக கூறியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி கூறி இருக்கிறார். நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, அந்த ஆவணம் வாக்குச்சாவடி அதிகாரியால் வழங்கப்பட வில்லை என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், ஷகுன் ராணி, நீங்கள் குற்றம் சாட்டியது போல், இரு முறை அல்ல, ஒருமுறை மட்டுமே ஓட்டு போட்டதாக கூறியுள்ளார். எங்கள் முதல் கட்ட விசாரணையில், நிருபர்கள் சந்திப்பில் நீங்கள் காட்டிய அந்த குறிப்பிட்ட ஆவணம், வாக்குச்சாவடி அதிகாரியால் வழங்கப்பட்ட ஆவணம் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணையை நடத்த உங்களின் வசம் உள்ள ஆவணங்களை வழங்க வேண்டும். ஷகுன் ராணியோ அல்லது வேறு யாரோ ஒருவரோ இருமுறை வாக்களித்து உள்ளனரா என்பதை கண்டறிய நீங்கள் வைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே, அது தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் அந்த நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளது.