திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கர்நாடக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு
திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கர்நாடக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 06, 2025 10:58 PM
மைசூரு: ''டி.நரசிபுராவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்கு, மாநில அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
'எக்ஸ்' சமூக வலைளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு பின் மஹா கும்பமேளா, ஜன., 16ல் துவங்கியது. இவ்விழா, இம்மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது.
அதுபோன்று, தெற்கு காசி என்று அழைக்கப்படும், மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவில் காவிரி, கபினி, சரோவா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடத்தப்படுகிறது. இந்தாண்டு பிப்., 10 தேதி முதல் 12ம் தேதி வரை மூன்று நாட்கள் கும்பமேளா நடக்கிறது.
சிறந்த முறையில் கொண்டாட, மாநில அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி, கர்நாடக மாநிலம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணியருக்காகவும்; நரசிபுரா நடவுனில் அனைத்து வசதிகள் செய்யவும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி நிரல்
பிப்., 10ம் தேதி கும்பமேளா துவக்க நாளில், அகஸ்தியர் கோவிலில் சங்கல்பம், கணபதி ஹோமம், ருத்ராபிஷேகம், மாலையில் மத நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பிப்., 11ல் நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் நடக்கிறது. அதை தொடர்ந்து, வாரணாசியில் நடப்பது போன்று, தீப ஆராதனை நடக்கிறது.
பிப்., 12ல் ஏழு ஆறுகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படும். சண்டிகா ஹோமம், பூர்ணாஹூதி, திரிவேணி சங்கமம், கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

