ADDED : பிப் 19, 2025 02:54 AM

பெங்களூரு,'குழந்தைகளின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த கடலை மிட்டாய் நிறுத்தப்பட உள்ளது' என, கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் பள்ளிக்கு வந்ததும் காலையில் பால், மதியம் சத்துணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவுத் திட்டம் குறித்து ஆய்வு நடத்திய தார்வாட், கலபுரகி மாவட்ட கல்வித்துறை கூடுதல் கமிஷனர்கள், கல்வித்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதில், 'மாணவர்களுக்கு வழங்கப்படும் கடலை மிட்டாயில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது, மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கை ஏற்படுத்தும்.
மேலும், இந்த மிட்டாய்கள் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகின்றன. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் திரிலோக் சந்தர் கூறுகையில், ''தினமும், 55 லட்சம் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதில், 30 சதவீதம் பேர் கடலை மிட்டாய் அல்லது வாழைப்பழம் சாப்பிடுகின்றனர்.
''கடலை மிட்டாயின் அளவு, தரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே, கடலை மிட்டாயை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.