ADDED : செப் 19, 2024 11:06 PM

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நாகேந்திரா விலகி, மூன்றரை மாதங்கள் முடிந்தன. இதுவரை யாரும் நியமிக்கப்படாததால், துறையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்தாண்டு மே 20ம் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. மே 27ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக, பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா பொறுப்பேற்றார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த நிதி முறைகேட்டில் சிக்கியதால், 2024 மே 31ம் தேதி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை, யாருக்கும் ஒதுக்காமல், முதல்வர் சித்தராமையா தன்னிடமே வைத்துள்ளார். அரசியல் பரபரப்புகளால், இருக்கும் துறைகள் குறித்து ஆலோசனை நடத்தவே முதல்வரால் முடியவில்லை.
நிதி, அமைச்சரவை விவகாரம், ஊழியர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உளவு, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை போன்ற துறைகளை முதல்வர் கவனித்து வருகிறார்.
இத்துடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் வைத்திருப்பதால், எந்த முன்னேற்றமும் இன்றி விளையாட்டு வீரர், வீராங்கனையர் அவதிப்படுகின்றனர்.
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போதும், விளையாட்டு துறையை கவனிக்க அமைச்சர் இல்லாததால், விளையாட்டு வீரர்களை கர்நாடக அரசு சார்பில் யாரும் ஊக்கப்படுத்தவில்லை.
அமைச்சர் பதவியில் இருந்து நாகேந்திரா விலகி, மூன்றரை மாதங்கள் முடிந்தது. அந்த அமைச்சர் பதவியும் காலியாக உள்ளது. ஒருவரை அமைச்சராக்கி பதவி வழங்கினால், துறையை கவனிக்கலாம். அமைச்சரை நியமிக்க இன்னும் எத்தனை மாதம் வேண்டும் என்று மக்கள் புலம்புகின்றனர்
- நமது நிருபர் -.