சர்ச்சை அரசியல்வாதிகளுக்கு கர்நாடகா ஐகோர்ட் கண்டனம்
சர்ச்சை அரசியல்வாதிகளுக்கு கர்நாடகா ஐகோர்ட் கண்டனம்
ADDED : பிப் 17, 2024 05:09 AM
பெங்களூரு, : சர்ச்சை அரசியல்வாதிகளுக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தேச துரோக அறிக்கைகளை வெளியிடும், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை போன்றவரை சுட்டுக்கொல்லும், சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறி இருந்தார்.
இதுகுறித்து காங்கிரசார் அளித்த புகாரில், தாவணகெரே, யஷ்வந்த்பூர் போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவானது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் நேற்று விசாரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், '' ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை கர்நாடகா அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசுவது ஏன். பேசும்போது ஏன் நல்ல வார்த்தையை பயன்படுத்துவது இல்லை. கர்நாடகா பல சித்தாந்தம் கொண்ட மாநிலம். அரசியல்வாதிகள் பேசும் போது, கவனமாக இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகள் நீங்கள் பேசுவதை பார்க்கினணறனர்; பேசும் போது கவனமாக பேசுங்கள்,'' என்றார்.
இதையடுத்து ஈஸ்வரப்பாவிடம் விசாரணை நடத்த, இடைக்கால தடை விதித்தார்.
இதுபோன்று உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேயும், முதல்வர் சித்தராமையாவை ஒருமையில் பேசியது தொடர்பாக வழக்கு பதிவானது. அவரும் வழக்கை தள்ளுபடி செய்ய, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவையும் நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் விசாரித்தார்.
முதல்வருக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தலாமா. உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெறுகின்றன. ஆனால் ஜனநாயகம் அப்படியே தான் உள்ளது. பேசுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தை, மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என்று, அனந்த்குமார் ஹெக்டே மீது, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.