கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் பொங்கல் விழா கயிறு இழுப்பதில் ஆண்கள் உற்சாகம்; கோலமிடுதலில் பெண்கள் அசத்தல்
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் பொங்கல் விழா கயிறு இழுப்பதில் ஆண்கள் உற்சாகம்; கோலமிடுதலில் பெண்கள் அசத்தல்
ADDED : ஜன 29, 2024 07:35 AM

பெங்களூரு: கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் சார்பில், பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்கள் கயிறு இழுக்கும் போட்டியிலும், பெண்கள் கோலப் போட்டியிலும் அசத்தினர்.
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் சார்பில், பெங்களூரு கனகபுரா சாலை ஆரோஹள்ளியில் உள்ள, காமராஜர் என்கிளைவ் குடியிருப்பு வளாகத்தில், நேற்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் சங்கத் தலைவர் தியாகராஜன், செயலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தனர்.
ஆர்யா ஈடிகா சங்கத்தின் தலைவர் திம்மேகவுடா, கர்நாடகா தேவர் சங்க தலைவர் சுப்பையா தேவர், கர்நாடகா இந்து நாடார் சங்க பொருளாளர் ஜவகர், காமராஜர் என்கிளைவ் குடியிருப்பு சங்க செயலர் சசிகாந்த், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன்.
கே.இ.ஒ.எஸ்., பொருளாளர் சரவணராஜ், கர்நாடகா முதலியார் சங்க துணை தலைவர் நந்தகுமார், சங்கத்தின் இணை செயலர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் சீனிவாஸ், இஸ்ரோ விஞ்ஞானி ஜெயந்தி ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கயிறு இழுக்கும் போட்டி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும், குத்துவிளக்கேற்றியும் விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி துவங்கியதும் பொங்கல் பானையில், பெண்கள் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வந்ததும், பொங்கலோ... பொங்கல் என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.
அதன்பின்னர் ஆண்களுக்கு கரும்பு உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி; பெண்களுக்கு கோலப்போட்டி; 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, பம்பரம் விடும் போட்டி நடந்தது. இதில் சிறுவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, பம்பரம் விட்டனர்.
குலுக்கல் முறையில் பரிசு
இதனை தொடர்ந்து மாறுவேட போட்டி நடந்தது. பாரத மாதா, ராதை, டாக்டர், போலீஸ் உள்ளிட்ட வேடங்களை அணிந்து வந்து, சிறுவர், சிறுமியர் அசத்தினர். சங்கம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும், தமிழ் வகுப்பில் படித்து வரும், நான்கு பேர், மேடையில் நின்று பாரதியார், அவ்வை பாடல்களை பாடி அசத்தினர். இதற்கு பலத்த கைதட்டல் எழுந்தது.
இதையடுத்து பரதநாட்டியம் அரங்கேறியது. பின்னர் டி.ஜே.பாடல்களை இசைத்து, விழாவில் பங்கேற்றவர்கள் குத்தாட்டம் போட்டனர். மனைவிக்கு, கணவர்கள் மேக் அப் போடும் போட்டி நடந்தது. இதில் ஆறு ஜோடிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்திற்கு நன்கொடை அளித்தவர்களுக்கு, குலுக்கல் முறையில் பரிசு அளிக்கப்பட்டது. மூன்றாவது பரிசு 3 பேருக்கும், இரண்டாவது பரிசு 2 பேருக்கும், முதல் பரிசு ஒருவருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.
நவம்பரில் சுற்றுலா
கர்நாடகா இந்து நாடார் அசோசியேஷன் சங்க செயலர் கிருஷ்ணவேணி: கர்நாடகாவில் வசிக்கும் நாடார் சமூக தொழில் அதிபர்கள், இன்ஜினியர்களை ஒன்றிணைத்து, வேலை வாய்ப்பு உருவாக்க, சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி வருகிறோம். வரும் நவம்பர் மாதம், சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினரை சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
தேவர் சங்க தலைவர் சுப்பையா தேவர்: மாதந்தோறும் கூட்டங்களை நடத்த வேண்டும். உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு பேச வேண்டும். நாம் பேசினால் தான், நமக்கு வேண்டிய சலுகைகள் கிடைக்கும்.
பத்ரகாளி கோவில்
ஆர்யா ஈடிகா சங்க தலைவர் திம்மேகவுடா: கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரில் ஆர்ய ஈடிகா சமூக மாநாட்டை நடத்தினேன்.
அதன்பின்னர் மதுரையில் நடந்த, நாடார் சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள, எனக்கு அழைப்பு வந்தது.
அங்கு சென்றேன். சங்கத்தின் வளர்ச்சிக்காக, அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை பார்த்தேன். அதுபோன்று ஆர்ய ஈடிகா சமூக வளர்ச்சிக்கும் செய்ய வேண்டும் என்று, ஆசை வந்து உள்ளது.
கர்நாடகா இந்து நாடார் சங்க பொறுப்பாளர் சுரேஷ்குமார்: காமராஜர் என்கிளைவ் குடியிருப்பு வளாகத்தில், பத்ரகாளி அம்மன் கோவில் கட்ட உள்ளோம். இதற்கான நிதிக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆகாம விதிபடி கோவில் கட்ட, கருத்து சேகரித்து வருகிறோம்.
கூடிய விரைவில் கோவில் கட்டும் தேதி அறிவிக்கப்படும்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்காக, சில்க் போர்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, வாகன வசதி செய்யப்பட்டு இருந்தது.