ADDED : ஜன 30, 2024 11:44 PM
மக்களுக்கு சேவை செய்ய தான் அரசியலுக்கு வந்து உள்ளேன் என்று சொல்லிக் கொண்டாலும், சொன்னபடி நடந்து கொள்வதில், இன்றைய அரசியல்வாதிகள் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரோ, மறைந்த தமிழக அமைச்சர் கக்கனோ இல்லை. இன்றைய அரசியல்வாதிகளுக்கு பதவி, அதிகாரம் முக்கியமாகிவிட்டது. இதற்காக என்ன வேண்டும் என்றாலும், செய்யும் நிலைக்கு வந்து விட்டனர்.
குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள் பச்சோந்தி நிறம் மாறுவது போல, நாளுக்கு, நாள் கட்சி மாறி வருகின்றனர். என்னப்பா... நேத்து தானே உன்னை வேற கட்சியில பார்த்தேன்... இன்னைக்கு இன்னொரு கட்சிக்கு வந்துட்டன்னு கேட்குற, அளவுக்கு இருக்கு நிலைமை. கட்சி மாறும் அரசியல்வாதிகளோ... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு, வெட்கமே இல்லாம சிரிச்சிட்டே சொல்றாங்க.
பிள்ளையார் சுழி
கர்நாடகாவுல பதவி, அதிகாரத்துக்காக கட்சி தாவுற பழக்கத்த ஆரம்பிச்சது எப்போது என்று யோசிக்க ஆரம்பித்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. நேர்மையாக இருக்கோம்னு சொல்லிக் கொண்டே கட்சி தாவுற பழக்கத்துக்கு, பிள்ளையார் சுழி போட்டவங்க.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவனேன்னு இருந்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள, பதவி, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு தாவினாங்க. ஒரு கட்சியில இன்னொரு கட்சிக்கு ஓடுறதும், அங்கே இருந்து, இன்னொரு கட்சிக்கு ஓடுறதும்னு ஜாஸ்தியாயிடுச்சி.
கேட்டா தொகுதி மக்களுக்காக தான், கட்சி மாறுறோம்னு நல்லவங்க மாதிரி பேசுறாங்க. மக்கள் மேல அக்கறையும் இல்ல... ஒரு மண்ணும் இல்ல... நாம நல்லா இருக்கணும்... நம்ம குடும்பம் நல்ல இருக்கணும்னு, ஒரே நினைப்பு மட்டும் தான், அரசியல்வாதிகள் மண்டையில ஓடிட்டு இருக்கு. மத்தபடி யார் எப்படி போன என்ன அப்படிங்குற, மனநிலையில தான் இருக்காங்க.
நம்ப வைத்து கழுத்து அறுப்பு
நமக்கு ஏதாவது நல்லது நடந்துறாதான்னு நினைச்சு, இந்த பச்சோந்திகள நம்பி, ஓட்டு போடுற மக்கள் தான் பாவம்... மக்களோட நிலைமை இப்படி இருந்தா, பச்சோந்தி அரசியல்வாதிகள நம்பி, 'சீட்' கொடுக்குறாங்க பாருங்க கட்சிகளோட தலைவர்கள்... அவங்க நிலையும் பரிதாபம் தான்.. கிட்டதட்ட நம்ப வைச்சு கழுத்தறுக்குற நிலைமை தான்...
பா.ஜ.,வுல எல்லா பதவியும் அனுபவிச்சிட்டு, காங்கிரஸ் வந்த ஜெகதீஷ் ஷெட்டர் மேல, மாநில தலைவர் சிவகுமார் பெரிய நம்பிக்கை வைச்சு இருந்தாரு. ஆனா, துாங்கி கிட்டு இருக்குறவங்கள கழுத்த அறுத்துப் போட்டு போற மாதிரி, பா.ஜ.,வுக்கு போயிருக்காரு ஜெகதீஷ் ஷெட்டர்.
மோடி மறுபடியும் பிரதமர் ஆனா, நாட்டை விட்ட போயிருவேன்னு சொன்னாரு, தேவகவுடா.
ஆனால், இப்போது அந்தர் பல்டி. அப்பா 8 அடி பாய்ஞ்சா... மகன் 16 அடி பாய்வேன்னு... சொல்லுற மாதிரி இருக்கு தேவகவுடாவோட மகன் குமாரசாமி செயல்பாடும், பேச்சும் உள்ளது.
இதுக்கு குறைஞ்சவங்க நாங்க இல்லை என்று சொல்லும் அளவு காங்கிரஸ் கட்சியிலயும் நடந்துகிட்டு இருக்கு. பதவி, அதிகாரத்துக்காக சுத்திட்டு வர்றாங்க.
சர்வே எடுக்கும் கட்சிகள்
இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வருது. இப்போ இருக்குற கட்சியில, 'சீட்' கொடுக்காம போனா... எந்த கட்சிக்கு ஓடலாம்னு, இப்போ இருந்தே பச்சோந்தி அரசியல்வாதிகள் கணக்கு போட ஆரம்பிச்சி இருக்காங்க. எந்தெந்த கட்சியில இருந்து, எந்தெந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஓட போறாங்கன்னு, வர்ற நாட்கள்ல கண்கூடாக பார்க்கலாம்.
யாரு, யாரு நம்ப வைச்சு கழுத்த அறுக்க போறாங்களோன்னு, கட்சி தலைவர்களுக்கு இப்போவே கவலை வந்துருக்கு.
நடந்தா நல்ல பாம்பு கொத்துது... படுத்தா பச்சை பாம்பு கொத்துது... என்ன பண்ணலாம்னு, கட்சி தலைவர்கள் விழிபிதுங்கி நிற்குறாங்களாம். யாரு, யாரு எல்லாம் கட்சியில இருந்து ஓடுவங்கன்னு, இப்போ இருந்தே கட்சிகள் சர்வே எடுக்க, ஆரம்பிச்சி இருக்காங்களாம்.